பீகார் பல்கலைகழகத்தில் விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாத 30 மாணவர்கள் தேர்ச்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)
பீகார் மாநிலத்தில் மாநில கல்வி திட்டத்தில் பிளஸ்–2–வில் மானுடவியல், அறிவியல், வணிகவியல் என 3 பிரிவுகள் உண்டு. அதில் தேர்வுகள் நடத்தப்பட்டு சமீபத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
முதலிடம் பிடித்த சாதனை மாணவ, மாணவிகளை டி.வி. சேனல்கள் பேட்டி கண்டு வெளியிட்டன. மானுடவியல் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி ரூபிராயிடம் ‘‘அடுத்து என்ன படிக்கப்போகிறீர்கள்?’’ என்று கேட்டபோது ‘பொலிடிக்கல் சயின்ஸ்’ என்பதை ‘புரொடிகல் சயின்ஸ்’ என்று உச்சரித்தார். ‘அந்த பாடம் எதைப்பற்றியது?’ என்றபோது அவர் கூறிய பதில், ‘அது சமையல் கலை பற்றியது’ என்பதாகும். இந்த மாணவி பிளஸ்–2 வில் 500–க்கு 444 மதிப்பெண்கள்.அறிவியல் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவர் சவுரப் குமார். அவருக்கு எலெக்டிரான், புரோட்டான் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அவர் அறிவியல் பாடப்பிரிவில் முதலிடம்.
இதனால் தகுதியற்றவர்கள் சாதனை மாணவர்கள் பட்டியலில் இடம் பிடித்தது எப்படி, மோசடி நடந்துள்ளதா என்ற கேள்விகள் எழுந்தன.பீகாரில் இதையடுத்து, இவ்விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் உத்தரவிட்டார்.
இந்த் நிலையில் பீகார் மாநிலத்தில் விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாத மாணவர்களை எல்லாம் அங்குள்ள ஒரு பல்கலைக்கழகம் தேர்ச்சி பெற வைத்துள்ளது. முசாபர்பூரில் உள்ள பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. அந்த பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து, நிர்வாகத்திற்கு எதிராக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், பல்கலைக்கழகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இளங்கலை பிரிவில், தேர்வுக்கான விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாத 30 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது இதில் தெரிய வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, 'சம்பந்தப்பட்டவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் சதீஷ் தற்போது தெரிவித்துள்ளார்.
மறுமதிப்பீடுக்கு மாணவர்கள் விண்ணப்பித்தபோது, அவர்களின் விடைத்தாள்களை வெளியே எடுத்து பார்த்தபோதுதான், 30 மாணவர்களின் விடைத்தாள்களில் ஒரு வார்த்தை கூட எழுதப்படாமல் இருந்ததும், ஆனால் அவர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
வெற்றுத்தாளை வைத்து வெற்றி பெற்ற 30 மாணவர்களும் எல்என்டி கல்லூரியை சேர்ந்தவர்கள். பீகாரில் இது போன்று தொடர்ந்து கல்வி மோசடி சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.