ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் சாந்தன் ஒரிஜினல் சாந்தன் இல்லை: அம்பலமான உண்மை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சாந்தன் உண்மையான குற்றவாளி இல்லை எனவும், ராஜீவ் படுகொலைக்குக் காரணமான சாந்தனை நான்தான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன் என விசாரணை அதிகாரியாக இருந்த ஜெபமணி மோகன்ராஜ் கூறியுள்ளார்.
சிபிஐ ஆய்வாளர் ஜெபமணி மோகன்ராஜ் சமூக வலைதளமான பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவருடை பதிவில், விடுதலைப்புலி குண்டு சாந்தனை திருச்சியில் வைத்து விடிய காலை 04:10 மணிக்கு 3 ஆய்வாளர்கள் 7 ரவுண்ட் சுட்டோம். நான் பயன்படுத்தியது .38 ரிவால்வர். மற்றவர்கள் பயன் படுத்தியது 9 எம்எம் பிஸ்டல்.
நான் சுட்டது ஒரு ரவுண்ட் மட்டுமே! குண்டு சாந்தன் இருதயத்தை துளைத்தது என் துப்பாக்கியில் இருந்து சென்ற குண்டுதான். இது தெரியவந்தவுடன் என் நண்பர்கள் என்னை தூக்கி கொண்டாடி மகிழ்ந்தார்கள். லேசாக மழை பெய்துகொண்டு இருந்தது. இந்த காட்சிகள் இன்னும் எனக்கு பசுமையாக நினைவில் இருக்கின்றன. இது கதை வசனம் இல்லை. ஒரு தேச பக்தன் தன் தேசத்தின் மானம் காக்க துணிச்சலாக கடமை ஆற்றிய சரித்திர நிகழ்வு.
இவ்வாறு சிபிஐ ஆய்வாளராக இருந்த ஜெபமணி மோகன்ராஜ் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இந்த சாந்தன் அப்பாவி என கூறப்படுகிறது, வெளிநாட்டுக்கு வேல்லைக்கு செல்வதற்காக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார் சின்ன சாந்தன். கஸ்டம்ஸ் பட்டியலில் சாந்தன் பெயர் இருந்தது. இதை வைத்து குற்றவாளியாக சேர்த்துவிட்டார்கள்.
பிறகு, உண்மையான குற்றவாளி குண்டு சாந்தன் சிக்கிய தகவலை ரகோத்தமனுக்கு சொல்கிறார் மோகன்ராஜ். அவரோ, இது வெளிய தெரிஞ்சா சிபிஐக்கு பெரிய அவமானமாகப் போய்விடும். சுட்டுக் கொன்றுவிடுங்கள் என உத்தரவிட்டதாக திருச்சி வேலுச்சாமியிடம் பேசியிருக்கிறார் மோகன்ராஜ்.
இது தொடர்பாக பேசிய மோகன்ராஜ் நான் தான் சாந்தனை சுட்டுக்கொன்றேன் என்பதை ஒப்புக்கொள்கிறார். இதனால் மனித உரிமை ஆர்வலர்கள் கொதித்து போய் உள்ளனர். எந்த தவறும் செய்யாமல் 25 ஆண்டுகளாக சாந்தன் ஏன் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இதற்கு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதில் அளித்துள்ள மோகன்ராஜ், இந்த செய்தியை பார்த்து விட்டு மனித உரிமை ஆர்வலர்கள் எல்லாம் பதறி போய் இருக்கிறார்களாம். பதறுவதோடு நிறுத்தி கொள்ளாமல் உடனே புகார் செய்யுங்கள். போலீஸ் விசாரிக்கட்டும் என கூறியுள்ளார்.