இந்திய வரலாற்றில் முதல் முறையாக போர் விமானங்களை இயக்கும் பெண்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2016 (சனிக்கிழமை)
இந்திய விமானப் படை வரலாற்றில் முதல் முறையாக போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண் விமானிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய விமானப் படையில் போர் விமானங்களை இயக்கி போரில் ஈடுபடும் படைப் பிரிவுகளில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இந்த வரலாற்றை மாற்றி அமைக்கும் விதத்தில் போர் விமானிகளாக பெண்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். மோகனா சிங், பாவனா காந்த் மற்றும் அவனி சதுர்வேதி ஆகிய 3 பெண்கள் இந்திய விமானப் படையில் சேர்ந்து போர் விமானங்களை இயக்கும் பைலட்டுகளாக பயிற்சி பெற்றனர். பயிற்சி முடித்து முறைப்படி இன்று முதல் அவர்கள் பணியை தொடங்கியுள்ளனர். ஹைத்ராபாத் அருகே உள்ள விமானப் படை தளத்தில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகனா சிங், பீஹாரைச் சேர்ந்த பாவனா காந்த் மற்றும் ம.பி.,யைச் சேர்ந்த அவனி சதுர்வேதி ஆகியோருக்கு, டில்லியில் உள்ள, விமானப் படை பள்ளியில், போர் விமான பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களில், மோகனா சிங்கின் தந்தை விமானப் படையில் பணியாற்றுகிறார்.
கடந்த மார்ச்சில் பயிற்சியை முடித்த இவர்களுக்கு, ரஷ்யாவின் சுகோய், மிக் - 21 மற்றும் 27 ரக விமானங்கள் மற்றும் பிரான்சின் மிராஜ் - 2000 விமானங்களை இயக்கும் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.