சியோல் மாநாட்டில் விவாதம் இல்லை என கூறும் சீனா : N.S.G-யில் சேரும் இந்தியாவின் முயற்சிக்கு பின்னடைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2016 (திங்கட்கிழமை)
அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்ப்பது குறித்து, இந்த வாரம் சியோலில் நடைபெறும் மாநாட்டில் விவாதிக்கப்பட மாட்டாது என சீனா கூறியுள்ளது. சீனாவின் இந்த கருத்து இந்தியாவை ஏமாற்றமடையச் செய்துள்ளது. N.S.G எனப்படும் அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியா இடம் பெற சீனா எதிர்ப்பு தெரிவிக்காது என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா கூறி வரும் நிலையில் அந்நாடு இப்படி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவை சேர்ப்பது பற்றி உறுப்பு நாடுகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே உறுப்பினர் கோரிக்கை குறித்து இந்தியா இனி தங்களிடம் பேச தேவையில்லை என சீனா திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்த வாரம் சியோலில் நடைபெற உள்ள என்.எஸ்.ஜி மாநாட்டில் இந்தியாவை சேர்ப்பது பற்றிய விவாதம் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என கூறியுள்ளது. இதனால் இந்தியாவின் என்.எஸ்.ஜி கனவு பொய்த்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.