அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும் (வயது 68), குடியரசு கட்சி தரப்பில் பெரும் கோடீசுவர தொழில் அதிபர் டொனால்டு டிரம்பும் (69) போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகஸ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார் டொனால்டு டிரம்ப்.
அப்போது அந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த வாலிபர் ஒருவர் திடீரென்று போலீஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை பறித்து டிரம்ப் மீது சுட முயன்றுள்ளார்.இச்சம்பவத்தில் சுதாரித்துக்கொண்ட போலீசார் அதிரடியாக செயல்பட்டு அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர் . இதனையடுத்து அந்த வாலிபரை கைது செய்துள்ள போலீசார் மேலதிக விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
குறிப்பிட்ட அந்த நபர் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து நெவாடா பகுதிக்கு டிரம்ப் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்குடன் வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மிச்சைல் சான்போர்ட் என்ற அந்த வாலிபர் முன்னதாக போலீசாரை அணுகி தமக்கு டிரம்பின் ஆட்டோகிராப் வேண்டும் என போலியாக கேட்டுள்ளார். இந்த பேச்சினிடையே அவரது துப்பாக்கியை உருவியதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் அந்த வாலிபர் கடந்த ஓராண்டாக டிரம்ப் மீதான தாக்குதலுக்கு முயன்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு முன்னதாக லாஸ் வேகஸ் பகுதியில் துப்பாக்கிசுடும் பயிற்சியிலும் அந்த நபர் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் தமக்கு போதிய பாதுகாப்பு வசதிகளை மாகாண நிர்வாகம் செய்து தரவில்லை என குற்றம்சாட்டினார்.