சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் பிரகீத் எக்னலிகொட வழக்கு தொடர்பில், காணாமல்போயுள்ள இராணுவ ஆவணங்களை கண்டறிவதற்கென இராணுவ தளபதியால் இரண்டு விசாரணை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளின் முடிவுகள் நீதிமன்றங்களுக்கும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கும் அறிவிக்கப்படும் என இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஊடகவிலாளர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு இராணுவம் பூரண உதவியை வழங்கும் என இராணுவத் தளபதி உறுதி அளித்துள்ளார். மூத்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என ஊடகங்கள் சுமத்தும் குற்றச்சாட்டையும் இராணுவம் நிராகரித்துள்ளது.
நாட்டின் சட்டத்தை நிலைநிறுத்துவதில் இராணுவம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தவறிழைத்தவர்களை கைதுசெய்வதற்கு பின்னிற்க போவதில்லை எனவும் இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.