ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் மக்கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார்.
2 உலகப்போர்களால் உலக நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து, ஐரோப்பா கண்டத்தில் நிரந்தர அமைதியை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய 6 நாடுகள் இணைந்து ‘ஐரோப்பிய பொருளாதார சமூகம்’ (இ.இ.சி.) என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை கடந்த 1958-ம் ஆண்டு உருவாக்கின. இந்த அமைப்பில் 1973-ம் ஆண்டு இங்கிலாந்தும் உறுப்பினராக இணைந்தது.
சில ஆண்டுகளுக்குப்பின் அதாவது 1993-ம் ஆண்டு, இந்த அமைப்பின் பெயர் ஐரோப்பிய யூனியன் (இ.யு.) என மாற்றியமைக்கப்பட்டது. இதில் தற்போது 28 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்த ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை அங்கு வலுத்தது. இது தொடர்பாக நாட்டு மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தும் நிலைக்கு பிரதமர் டேவிட் கேமரூன் தள்ளப்பட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து நீடிப்பதா, வெளியேறுவதா என்பது குறித்து நேற்று அந்நாட்டில் பொது வாக்கெடுப்பு நடந்தது.
இங்கிலாந்து பெரும்பாலும் வெளியேற வாய்ப்பில்லை என தகவல் வெளியானது. இருப்பினும் வாக்கு எண்ணிக்கை முடிவு உலக நாடுகள் அனைத்திற்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்தது. ஐரோப்பிய யூனியனில் தொடர்வதா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும் பொதுவாக்கெடுப்பில் கடும் போட்டியில் ‘வெளியேறவேண்டும்’ என்ற தரப்பு வெற்றிபெற்றது. ஏறக்குறைய 52 சதவீத வாக்காளர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில் விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பொதுவாக்கெடுப்பில் 4.65 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். 71.9 சதவித வாக்குகள் பதிவானது. 382 மையங்களில் வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று 51.9 சதவித மக்கள் ஆதரவு (17,410,742) தெரிவித்து உள்ளனர். பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலே இருக்க வேண்டும் என்று 48.1 சதவித மக்கள் ஆதரவு (16,141,241) தெரிவித்து உள்ளனர். மெஜாரிட்டியின் அடிப்படையில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற உள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து ஒரு சில ஆண்டுகளில் பிரிட்டன் வெளியேறும்.
பதவி விலகுகிறார்
இங்கிலாந்து தேர்தல் ஆணையம் பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர் என்று அறிவித்ததை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் டேவிட் கேம்ரூன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
”இந்த மிகப்பெரிய முடிவில் நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை கொண்டு உள்ளோம்,”
ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் முழு பேச்சுவார்த்தைக்கு நாம் தயாராகவேண்டும், ஸ்காட்டிஷ், வேல்ஷ் மற்றும் ஐரிஷ் ஈடுபாட்டுடன்.
இந்த பிரசாரத்தில் நான் முழுமையாக, இதையப்பூர்வமாக, ஆன்மாவுடன் போராடினேன் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக டேவிட் கேம்ரூன் அறிவித்தார். முறைப்படி அக்டோபர் மாதம் பதவி விலகுவதாக டேவிட் கேமரூன் அறிவித்து உள்ளார். பிரிட்டன் மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறிஉள்ள பிரதமர் டேவிட் கேமரூன் பேச்சுவார்த்தைக்கான பணியை புதிய பிரதமர் செய்வார் என்றும் தன்னுடைய முடிவை ராணியிடம் தெரிவித்துவிட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
இங்கிலாந்து, வேல்ஸ் வலிமையாக பிரிட்டன் வெளியேறுவதற்கும், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் நீடிக்கவேண்டும் என்பதற்கும் வாக்களித்து உள்ளன. வெளியேற விரும்பியவர்கள் இதனை ‘சுதந்திரம்’ என்று பாராட்டிஉள்ளனர். ஆனால் ஐரோப்பிய யூனியனிலே பிரிட்டன் இருக்கவேண்டும் என்று விரும்பியவர்கள் ‘பேரழிவு’ என்று வருத்தத்துடன் கூறிஉள்ளனர்.