24 வெடிகுண்டு மோப்ப நாய்களை கொலை செய்த அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2016 (சனிக்கிழமை)
குவைத்தில் எண்ணெய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் 24 வெடிகுண்டு மோப்ப நாய்களை கொன்று தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான ஈஸ்டர்ன் செக்யூரிட்டி குவைத்தில் உள்ள தேசிய எண்ணெய் நிறுவனத்தின் பாதுகாப்பு பணிகளை கவனித்து வந்தது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத குழுவினரிடம் இருந்து வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு பணிகளை கவனிக்கும் நிறுவனங்கள் மோப்ப நாய்களையும் பணியில் ஈடுபடுத்தி வந்துள்ளது.
இந்நிலையில் குவைத் தேசிய பெட்ரோலிய நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, செக்யூரிட்டி குவைத்தில் நிறுவனத்தில் பயன்படுத்திய மோப்ப நாய்களை மொத்தமாக கொன்று தள்ளியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்சம்வத்தை அடுத்து மிருகவதை தடுப்பு ஆர்வலர்கள் அந்த பாதுகாப்பு நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமானது குறைந்தபட்சம் 24 நாய்களையாவது கொன்று குவித்திருக்கலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்பு நிறுவனம் மீது வழக்கு பதிய வேண்டும் என வாதிட்டுவரும் மிருக ஆர்வலர் ஒருவர், அந்த நிறுவனம் 90 நாய்கள் வரை கொலை செய்திருக்க வாய்ப்பு உண்டு என தெரிவித்துள்ளார்.
நாய்களின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து கொலை செய்துள்ளதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் நாய்கள் அனைத்தையும் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த நிறுவனமானது விலங்குகள் நல குழுவினரிடம் அந்த நாய்களை தத்தெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு அவர்கள் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.