சுகோய் 30 ரக போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. நீண்ட தூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்த பிரமோஸ் ரக ஏவுகணை விண்வெளித் திட்டத்தின் கீழ் தயாரித்து வருகிறது. ராணுவத்தின் முப்படைகளுக்கும் தேவையான ஏவுகணைகளை தயாரித்து அவற்றை பரிசோதிப்பதில் இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி மையமான டி.ஆர்.டி.ஓ. மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இதேபோல் போர்விமானத்தில் பயன்படுத்தக் கூடிய அதிநவீன ஏவுகணைகளை வடிவமைப்பதிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவிடம் உள்ள அதிநவீன மற்றும் நீண்ட தூரம் பறந்து சென்று தாக்குதல் நடத்தும் சுகோய்-30 ரக போர்விமானங்களில் இந்த ஏவுகணையை பொருத்தி அதை பரிசோதித்தது. இதற்கான செயல்விளக்க நிகழ்ச்சி மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் விமான நிலைய பகுதியில் நேற்று நடந்தது. இந்த சோதனையை தொடர்ந்து வரும் மாதங்களில் 2.5 டன் எடை கொண்ட பிரமோஸ் ரக ஏவுகணையை சுகோய்-30 விமானங்களில் பொருத்தி அசல் சோதனை நடத்துவதற்கான வாய்ப்பு நெருங்கி உள்ளதாக அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இது குறித்து இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின்(நாசிக்) தலைமை நிர்வாக இயக்குனர் சுதிர்குமார் மிஸ்ரா நிருபர்களிடம் கூறுகையில், ''நீண்ட தூரம் பறந்து தாக்குதல் நடத்தும் போர் விமானங்களில் சக்திவாய்ந்த ஏவுகணை இணைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு இருப்பது உலக வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த சாதனை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், டி.ஆர்.டி.ஓ., இந்திய விமானப்படை, பிரமோஸ் ஏவுகணை திட்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி'' என்றார். இந்தியாவின் இச்சோதனை உலக நாடுகளை வியப்படையச்செய்துள்ளது.