ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேறியமை இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ; விஜித ஹேரத்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2016 (திங்கட்கிழமை)
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேற்றம் இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இதனை சரிசெய்ய ஏனைய நாடுகளுடன் இலங்கை அரசு உடன்படிக்கைகளை செய்து கொள்வதால் பலன் எதுவும் கிடைக்காது எனத் தெரிவித்த ஜே.வி.பி, இன்று உலகமே பாரிய நிதி நெருக்கடியை சந்தித்திருப்பதாகவும் ஜே.வி.பி. தெரிவித்தது.
இது தொடர்பாக ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொள்வதற்காகவே ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அந்த இலக்கை வெற்றி பெற அந்த ஒன்றியத்தால் முடியவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பிரிட்டன் அங்கம் வகித்தாலும் வெளியேறினாலும் உலகப் பொருளாதார வீழ்ச்சியை தடுக்க முடியாது.
உலக பொருளாதார நெருக்கடி இலங்கையையும் பாதிக்கும். அமெரிக்காவின் பொருளாதார ஏதேச்சதிகாரத்தை வீழ்த்தவே ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்ததால் பிரிட்டனுக்கு தமது நாட்டு பிரச்சினையையும் அதற்கு மேலதிகமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டது.
அத்தோடு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பொருளாதாரப் பிரச்சினையால் சிக்கித் தவிக்கும் மக்கள் பிரிட்டனுக்கு இடம்பெயர ஆரம்பித்தனர்.
இதனால் பிரிட்டன் வெளியேறுவதை அந்நாட்டு மக்கள் ஆதரித்தனர். இது பொருளாதார வீழ்ச்சியின் ஒரு பக்கம் தான். அத்தோடு பிரிட்டனின் வெளியேற்றத்தால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்து கொள்வதற்கு வேறு நாடுகளுடன் இலங்கை அரசு உடன்படிக்கைகளை செய்து கொள்வதால் எமது நாட்டின் பாதிப்பை தடுக்க முடியாது ஏனென்றால் முழு உலகமே இன்று பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது என்றும் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.