2018 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்படப்போகும் மின்சார கேள்வியை பூர்த்தி செய்யும் பொருட்டு நாட்டில் உள்ள வீடுகளுக்கு சூரிய கல தொகுதிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் மின்வலுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுவரும் மின்சாரத்துக்கான கேள்வி மற்றும் அதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பிரச்சினை தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் அஜித்.பி.பெரேரா இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; நாட்டில் அதிகரித்து வரும் தொழிற்சாலைகளினால் இலங்கையில் மின்சாரத்துக்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பிரச்சினை அரசாங்கத்துக்கு பாரிய சவாலாக அமைவதோடு 2018 இல் பாரிய மின்சார தட்டுப்பாடை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் சம்பூர் அனல்மின் நிலையத்தை அமைப்பதையே நாம் நீண்டகால தீர்வு திட்டமாக கொண்டிருந்தோம்.
2017 இல் சம்பூர் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. தற்போது அச்செயற்திட்டமானது நிர்ணயித்த காலப்பகுதியில் செயற்படுத்த முடியாததன் காரணத்தால் மாற்றுத் திட்டமொன்றை உருவாக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இயற்கை சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. குறிப்பாக, நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சூரிய கலத்தொகுதியை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். -