ஈழப்பிரச்சினைக்கு பொதுவாக்கெடுப்புத் தான் ஒரே தீர்வு’ என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளார் வைகோ தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் தலைமையில் கடலூரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிலையில், செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஈழப்பிரச்சினைக்கு பொதுவாக்கெடுப்பு தான் ஒரே தீர்வு. கச்சத்தீவு பிரச்சினை முடிந்து போன பிரச்சினை அல்ல, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்தியாவின் ஒருபகுதியை வேறுநாட்டுக்கு கொடுக்க முடியாது, அதுவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.
இந்த பிரச்சினையில் எத்தகைய தகிடுதத்தங்கள் நடந்தன என்பது சட்டமன்றத்தில் மணிக்கணக்காக நடைபெற்ற விவாதங்கள் மூலம் தெரிய வரும். அதற்கு மேல் நான் அதற்குள்ளே போக விரும்பவில்லை. சட்டமன்ற விவாதமே, யார் செய்தது துரோகம்?, யார் மேல் தவறு உள்ளது? என்பதை கண்ணாடி போல் காட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை மக்கள் நலக் கூட்டணி தொடர்பில் கருத்து தெரிவித்த வைகோ, கூட்டணியை நான்கு கட்சிகள் இணைந்து உருவாக்கி இருப்பதாகவும் அவை புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பொதுவாக்கெடுப்பின் அடிப்படையில் தற்போது பிரிந்து சென்றுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்களும், ஈழப்பிரச்சினைக்கு அதுபோன்றதொரு பொதுவாக்கெடுப்பே சரியான தீர்வாக அமையும் என்று வலியுறுத்தி வருவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.