அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான கருத்து கணிப்புகளில் டொனால்ட் டிரம்பை முந்தினார் ஹிலாரி கிளிண்டன். அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், அமெரிக்க ஊடகங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இதில், வெளியான 2 கருத்து கணிப்பிலும் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளார். வாஷிங்டன் போஸ்ட்-ஏபிசி நியூஸ் கருத்துக் கணிப்பில் தற்போதைய நிலையில் தேர்தல் நடந்தால் ஹிலாரி 51 சதவீத வாக்குகளையும், டிரம்ப் 39 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என வெளியிடப்பட்டுள்ளது.
வால் ஸ்டீரிட் ஜர்னல்/என்பிசி நியூஸ் கருத்து கணிப்பில் ஹிலாரிக்கு 46 சதவீத வெற்றி வாய்ப்பும், டிரம்ப்புக்கு 41 சதவீத வெற்றி வாய்ப்பும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தனது அனல் பறக்கும் பிரசாரத்தால் வாக்காளர்களை ஈர்த்து வந்த டிரம்ப் சமீபத்திய சர்ச்சை பேச்சுகளால் பின்தங்கி வருகிறார். குறிப்பாக முஸ்லிம்கள் பற்றி டிரம்ப் தொடர்ந்து எதிரான கருத்துகளையே கூறி வருகிறார். இது முஸ்லிம்கள் மட்டுமின்றி மற்ற சமூகத்தினரையும் வெறுப்படைய செய்திருக்கிறது.
அண்டை நாடான மெக்சிகோ மக்களை பற்றியும், இந்தியர்களை பற்றியும் தரக்குறைவாக பேசி வருகிறார். இதனால், அதிபராக நாட்டை வழிநடத்தி செல்ல டிரம்ப் தகுதியான நபர் அல்ல என 3ல் 2 அமெரிக்கர்கள் கூறுவதாக வாஷிங்டன் போஸ்ட்-ஏபிசி நியூஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள், சிறுபான்மையினர், முஸ்லிம்கள் பற்றி டிரம்ப்பின் கருத்துகளும், யோசனைகளும் நியாயமற்ற வகையில் இருப்பதாகவும் பலர் கூறி உள்ளனர். அதே நேரத்தில், ஹிலாரி கிளிண்டனும் எளிதாக வென்று விட முடியாது என்றும் கருத்து கணிப்புகளில் மக்கள் கூறி உள்ளனர்.