துருக்கி விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் : 41 பேர் பரிதாப பலி: 239 பேர் காயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2016 (புதன்கிழமை)
துருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு நடத்திய தாக்குதலில் வெளிநாட்டினர் 13 பேர் உட்பட 41 பேர் பரிதாபமாக பலியாயினர். 239 பேர் காயம் அடைந்தனர். இதில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. துருக்கி நாட்டுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால், இஸ்தான்புல் நகரில் உள்ள ‘அடாதுர்க்’ சர்வதேச விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இது ஐரோப்பிய யூனியனில் 3வது பெரிய விமான நிலையம். இங்கு நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் பயணத்துக்கு தயாராக இருந்தனர். இரவு 10 மணியளவில் சர்வதேச புறப்பாடு பகுதியில், கருப்பு உடை அணிந்த மர்ம நபர் ஒருவர் புகுந்து திடீரென பாதுகாப்பு வீரர்கள் மற்றும் பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதனால் பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். உடனடியாக, பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு ஓடி வந்தனர். மேலும் 2 பேர்: இந்நிலையில் மேலும் 2 மர்ம நபர்கள் பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். சில வினாடிகளில் அவர்களை கவனித்துவிட்ட பாதுகாப்பு படயைினர் அந்த நபர்களை நோக்கி சுட்டனர். அதில் குண்டடிபட்டு நிலைகுலைந்து கீழே விழுந்த ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இதேபோல், அடுத்தடுத்து 2 நபர்களும் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். சக்திவாய்ந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 13 பேர் வெளிநாட்டினர். இவர்கள் சவுதி அரேபியா, ஈராக், துனிஷியா, உஸ்பெகிஸ்தான், சீனா, ஈரான், உக்ைரன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சுமார் 239 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலால் விமான நிலைய வளாகம் முழுவதும் ரத்தக்கறையாக காட்சியளித்தது. இறந்து கிடந்தவர்களை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள். சிலர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள். இந்த தாக்குதலில் இந்தியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. தாக்குதலை அடுத்து, விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். மீட்பு குழுவினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். விமான சேவைகள் அனைத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பரபரப்பான விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பையும் மீறி நடந்த இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐஎஸ் இயக்கம் பொறுப்பு?: இத்தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால் துருக்கி பிரதமர் பினாலி கூறுகையில், ‘‘இந்த தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள்தான் நடத்தியிருக்க வேண்டும். காரில் வந்த 3 தற்கொலைப்படை தீவிரவாதிகள் இந்த நாசவேலையை செய்துள்ளனர். தீவிரவாதம் உலகுக்கு அச்சுற்றுதலாக விளங்கி வருவது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. அப்பாவி மக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’’ என்றார். துருக்கி விமான நிலையத்தில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐநா பொதுச்செயலாளர் பான்கி மூன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தியில் ‘‘இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார். இதேபோல், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்துளார். துருக்கி அருகேயுள்ள சிரியா, ஈராக் ஆகியவற்றில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இவர்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து துருக்கியும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பழிவாங்குவதற்காக, துருக்கி மீது ஐஎஸ் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என கூறப்படுகிறது.