சென்னை தரமணியில், மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் தொழிலாளி ஒருவர் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை தரமணியில் கார் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார். மதுபோதையில் கார் ஓட்டியதாக இளம்பெண் ஐஸ்வர்யாவை போலீஸார் கைது செய்தனர்.
விபத்துக்கு காரணமான பெண்ணை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைதான ஐஸ்வர்யா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சென்னை உயநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
விசாரணை நீதிமன்றத்தை அணுகாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ததாகக் கூறி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
முனுசாமி, தனது நண்பர் மணிகண்டனுடன் வேலைக்குச் செல்வதற்காக சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தரமணி ராஜீவ்காந்தி சாலைக்கு வந்தார். அவர் சாலையின் எதிர்ப்பக்கம் செல்வதற்காக, சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாறில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி அதிவேகமாக வந்த ஒரு கார் திடீரென சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த முனுசாமி மீது பயங்கரமாக மோதியது. இதில் முனுசாமி பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.
இதில் பலத்த காயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆனால் விபத்தை ஏற்படுத்திய சொகுசுக் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதைப் பார்த்த அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள், தங்களது இரு சக்கர வாகனத்தில் அந்த காரை விரட்டிச் சென்று, அந்த காரை மடக்கிப் பிடித்தனர். மேலும் காருக்குள் இருந்த நபரை வெளியே கொண்டு வந்தனர். அப்போதுதான் காரை ஓட்டியது இளம்பெண் என்பதும், அவருடன் வந்ததும் இரு பெண்கள் என்பதும் அவர்களுக்கு தெரியவந்தது.
மேலும், அவர்கள் 3 பேரும் மதுபோதையில் தள்ளாடியபடி நின்றனராம்.
இதையடுத்து பொதுமக்கள், கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மதுபோதையில் நின்ற 3 பெண்களை பிடித்துச் சென்றனர்.
மேலும் முனுசாமியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.
பிடிபட்ட 3 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்களில், சேத்துப்பட்டு ஏரிப்பகுதியைச் சேர்ந்த வி.ஐஸ்வர்யா (26) என்பவர் காரை ஓட்டி வந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் ஐஸ்வர்யாவை கைது செய்தனர்.
அவர்களில் ஐஸ்வர்யா, மீது மதுபோதையில் வாகனம் ஓட்டியது, மரணத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை அதிக வேகமாக ஓட்டியது உள்ளிட்ட 3 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மென்பொருள் பொறியாளர்: கைது செய்யப்பட்ட ஐஸ்வர்யா சென்னையின் முக்கியமான தொழிலதிபர் ஒருவரின் மகள் என கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா போரூர் அருகே உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார்.
ஐஸ்வர்யா வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு ராயப்பேட்டையில் உள்ள ஒரு பிரபலமான திரையரங்கில் திரைப்படம் பார்த்திருப்பதும், அதன் பின்னர் தனது தோழிகளை துரைப்பாக்கத்தில் இறக்கி விடுவதற்கு காரில் வரும்போது விபத்து ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
ஐஸ்வர்யா, சைதாப்பேட்டை 18ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் சனிக்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸார், ஐஸ்வர்யாவை புழல் பெண்கள் சிறப்பு சிறையில் அடைத்தனர்.