சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து, இந்தப் பகுதி வழியே நடைபெறுவதாலும், இந்த கடலில் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப்படுவதாலும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், 'தென்சீனக் கடலில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது' என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.
இந்த நிலையில், சீனாவுக்கு எதிராக நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் ஐ.நா. சட்டதிட்டங்களின்படி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச அளவிலான மத்தியஸ்தம் செய்வதற்கான நிரந்தர தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ், 2013&ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. 17 ஆண்டுகளாக எத்தனையே பேச்சு வார்த்தை நடத்தியும், அரசியல் மற்றும் ராஜ்ய ரீதியிலான எல்லா வாய்ப்புகளும் முடிந்து போன நிலையில்தான் இந்த வழக்கை தொடுத்திருப்பதாக பிலிப்பைன்ஸ் கூறியது.
ஆனால் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகார வரம்பு, இந்த தீர்ப்பாயத்துக்கு இல்லை என்று கூறி சீனா அதை புறக்கணித்து விட்டது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வழக்கின் தீர்ப்பை அந்த தீர்ப்பாயம் நேற்று வழங்கியது.
அது தனது தீர்ப்பில், தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் உரிமைகள் கோருவதற்கு சீனாவிடம் வரலாற்றுபூர்வ ஆதாரம் ஏதுமில்லை என தீர்ப்பில் கூறி உள்ளது. இந்த தீர்ப்பை பிலிப்பைன்ஸ் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி பெர்பெக்டோ யாசே கூறும்போது, 'தென் சீனக்கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் தொடுத்த வழக்கில் மத்தியஸ்தம் செய்வதற்கான நிரந்தர தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறோம்' என குறிப்பிட்டார்.இதே போன்று ஜப்பானும் வரவேற்றுள்ளது.
ஆனால் இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என சீனா திட்டவட்டமாக கூறி விட்டது. இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ’தென் சீனக்கடல் தீவுகளில் பிரத்யேக பொருளாதார மண்டலங்களை கொண்டுள்ளோம். இதில் 2 ஆயிரம் ஆண்டுக்கு மேலாக வரலாற்று ரீதியிலான செயல்பாடுகளை சீன மக்கள் கொண்டுள்ளனர். சீனாவின் நிலைப்பாடு, சர்வதேச சட்டம் மற்றும் நடைமுறைகளின்படியானதுதான் என கூறப்பட்டுள்ளது.இதனால், இந்த தீர்ப்பின் விளைவாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பதற்றம் அதிகரிக்கக்கூடும் எனவும் கருதப்படுகிறது.