மக்களுக்காக போராடுபவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல: - சீமான் பேட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2016 (வியாழக்கிழமை)
நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:–ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள சாந்தன் தன்னை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி இலங்கை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியமானதென தெரியவில்லை. எனினும் அவரது உணர்வை மதிக்க வேண்டும். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஜல்லிக் கட்டு நடத்த தனி மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். பள்ளி, கல்லூரி , வழிபாட்டு தலங்களின் அருகே அரசு மதுபானக் கடைகள் இயங்கவில்லை என்று கூறி வந்த அ.தி.மு.க. அரசு , தற்போது பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 1000 கடைகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது. படிப்படியாக மதுபானக் கடைகளை மூடினால் அது வரவேற்கத்தக்கது.
மீனவர்களின் சிறைபிடிப்பு தினசரி செய்தியாகிவிட்டது. தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கமாட்டேன் என அந்நாட்டு பிரதமர் கூறிவரும் நிலையில் இலங்கைக்கு போர்க்கப்பலை இந்தியா வழங்குவது ஏற்படையதல்ல.காஷ்மீரில் தீவிரவாதி என பர்ஹான் வானியை சுட்டுக்கொன்றதை ஏற்க முடியாது. மக்களுக்காக போராடுபவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.