சர்வதேச நீதிபதிகள் விவகாரமானது நெருக்கடிக்கு சமாளிப்பதற்கான உத்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2016 (வெள்ளிக்கிழமை)
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் அல்லது வெளிநாட்டு சட்டவாளர்களை உள்ளடக்கிய விசாரணை பொறிமுறைக்கு அரசாங்கம் ஜெனிவாவில் கைச்சாத்திட்டுள்ளமையானது நெருக்கடியை சமாளித்துக் கொள்வதற்கு கையாண்ட உத்தியே தவிர அதன் தார்மீக தன்மை என்பது வெறும் சூன்யமானதொன்றென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்தார்.
நாட்டின் மூலச் சட்டத்தில் நீதித்துறை அதிகாரத்தை மீறி செயற்படும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்பட வில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜெனிவா தீர்மானத்திற்கு அமைவாக பரிந்துரைக்கப்பட்டுள்ள சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கிய விசாரணை குழுவின் சட்டத்தன்மை தொடர்பாக தெளிவுப்படுத்தும் போதே முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில்,
இலங்கையின் அரசியலமைப்பை மூலச்சட்டமாக கொண்டே நாட்டின் அனைத்து துறைகளும் நிர்வகிக்கப்படுகின்றன. சட்டவாக்கச்சபைக்கும் நீதிதுறைக்கும் இடையில் பகிரப்பட்டுள்ள அதிகாரம் முக்கியமானதாகும். மக்கள் ஆணையின் பிரகாரம் சட்டவாக்கச்சபைக்கு சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் காணப்பட்டாலும் அதனை அமுலாக்கும் அதிகாரம் நீதிதுறைக்கே காணப்படுகின்றது. சட்டங்களை மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்படும் போது உச்ச நீதிமன்றின் வியாக்கியாணம் கோரப்பட வேண்டும். இவ்வாறு மூலச்சட்டத்தில் அனைத்து விடயங்களுக்கும் முக்கியத்தும் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி செயற்படும் போது தான் அது சட்டத்திற்கு முரணானது என்ற நிலைப்பாடு ஏற்படுகின்றது. கடந்த ஆண்டு ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையும் வழங்கியது. இது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆனால் அந்த தீர்மானத்தில் காணப்படுகின்ற பல விடயங்கள் இலங்கையின் சட்டத்தின் பிரகாரம் நடைமுறையில் எந்தளவு சாத்தியப்படும் என்பது ஆராயப்பட வேண்டியதொன்றாகும் என தெரிவித்தார்.