புனேவில் 'தங்க மனிதன்' தத்தாத்ரே புஜே கல்லால் அடித்துக் கொலை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2016 (வெள்ளிக்கிழமை)
சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்க சட்டை அணிந்து வலம் வந்த புனே நகரை சேர்ந்த 'தங்க மனிதர் ' தத்தாத்ரே புஜே, கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 3.5 கிலோ எடையுடன், 22 காரட் தங்கத்தினால், 15 கலைஞர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட தங்க சட்டையை அணிந்து, இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இந்த புஜே. அப்போது இந்த சட்டையின் மதிப்பு 1.27 கோடி ஆகும். உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த சட்டையாக இது கருதப்பட்டது. தங்க சட்டையால் தத்தாத்ரே 'கோல்டு மேன் ' என்றும் அழைக்கப்பட்டார்.
அது மட்டுமல்ல, அவரது உடம்பு முழுவதுமே தங்க நகைகள் தொங்கும். கையில் தடிமனான தங்கக் காப்புகள், 10 விரல்களிலும் மோதிரங்கள் அணிவதும் புஜேவின் வழக்கம். மராட்டிய மாநிலத்தில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்த புஜே, இன்று காலை அங்குள்ள மைதானத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். பணப்பிரச்னை காரணமாக புஜே கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக அவரது உறவினர் உள்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சீட்டு விவகாரத்தில் பலருக்கு புஜே பணம் கொடுக்க வேண்டியது இருந்தாம். இந்த நிலையில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்காக புஜே அழைக்கப்பட்டிருந்தார். அந்த பார்ட்டியின் போது சிலர் சேர்ந்து தாக்கியதில் புஜே மரணமடைந்தாக சொல்லப்படுகிறது.
புஜேவின் மனைவி கூறுகையில், ''வியாழக்கிழமை இரவு சிலர் வீட்டுக்கு வந்தனர். என் கணவரை அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவரை கற்களால் தாக்கி கொலை செய்துள்ளனர்" என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். '
பிறந்த நாள் விழாவின் போது தனது தந்தையை சிலர் தாக்கியதை நேரில் பார்த்தாகவும் தன்னையும் அவர்கள் தாக்க வந்ததாகவும் புஜேவின் மகன் போலீசில் கூறியுள்ளார்.