வாக்குறுதிகளை நிறைவேற்ற கனடா அழுத்தம் கொடுக்கும் : பிரதமர் ஜஸ்டின்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/07/2016 (திங்கட்கிழமை)
உண்மையான சமாதானத்தை அடைந்துக்கொள்வதற்காக இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு கனடா தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடு தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை கலவரங்கள் தொடர்பிலான கனடாவில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களின் நினைவு நிகழ்வுகளில் கனடாவும் இணைந்து கொள்வதாகவும் கனடாவின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
தமிழ் மக்களுக்கு எதிரான நிகழ்வுகள் மற்றம் சிவில் யுத்தம் போன்ற கலவரங்களில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
யுத்தம் மற்றும் அழிவுகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது.
அந்தவகையில் உண்மையான சமாதானத்தை அடைந்துக்கொள்வதற்காக இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கனடா தொடர்ந்து இலங்கை அரசாங்கத்துக்கு ஊக்குவிப்பு வழங்கும்.
உண்மையான சமாதானம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பாதிக்கபபட்ட மக்களுக்கான நீதி போன்ற விடயங்களில் இலங்கையின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கனடா ஊக்குவிப்பு வழங்கும்.
ஜெனிவா
இதேவேளை ஜெனிவாவில் கடந்த மாதம் நடந்து முடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கனடா இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
இலங்கை தொடர்பான ஜெனிவா அமர்வில் கனடா நாட்டின் பிரதிநிதி குறிப்பிடுகையில்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனின் இலங்கை தொடர்பான வாய் மூல அறிக்கையை வரவேற்கிறோம். பிரேரணை ஊடாக இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஊக்குவிக்கிறோம்.
குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் இலங்கை அரசாங்கததை ஊக்குவிக்கிறோம். அரசியலமைப்பு மாற்றம் செய்யப்படுகின்றமை காணாமல் போனோருக்கான அலுவலகம் அமைக்கப்பட்டமை காணிகள் விடுவிக்கப்படுகின்றமை போன்றவற்றில் முன்னேற்றம் காணப்படுகின்றது. எனினும் இன்னும் அதிகம் செய்ய வேண்டி உள்ளது.
பொறுப்புக் கூறல் முறையானது சுயாதீனமாக இருக்க வேண்டும். அதில் அர்த்தமுள்ள சர்வதேச பங்களிப்பும் அமைவதானது, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கைக் கொள்ள செய்யும். கனடா இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.