திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் நேற்று பெங்களூருக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் சித்தூர், திருப்பதி வழியாக இரவு 8.30 மணிக்கு திருமலை வந்தடைந்தார்.
அங்கு, ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணா ரெட்டி, திருப்பதி சுகுணா எம்.எல்.ஏ. மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் வரவேற்றனர். அதன்பின் அவர், திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விடுதியில் குடும்பத்தினருடன் தங்கினார்.
இந்நிலையில் இலங்கை அதிபர் சிறிசேனா, இன்று அதிகாலை 2.15 மணிக்கு விடுதியில் இருந்து கோவிலுக்கு வந்தார். கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடந்த சுப்ரபாத சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
அதன்பின், திருமலையில் இருந்து காரில் புறப்பட்டு பெங்களூரு செல்லும் அவர், தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு செல்கிறார். இலங்கை அதிபரின் வருகையையொட்டி, திருப்பதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.