இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் 6-வது நபராக களம் இறங்கி பேட்டிங் செய்து 113 ரன்கள் குவித்தார். அத்துடன் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். விக்கெட் கீப்பர் சகா 7-வது வீரராக களம் இறங்கி 47 ரன்கள் சேர்த்தார்.
2-வது போட்டி டிராவில் முடிந்தது. இதில் அஸ்வின் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். சகா 47 ரன்கள் சேர்த்தார். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
கிராஸ் தீவில் நடைபெற்ற 3-வது போட்டியில் இந்தியா 237 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்து தத்தளித்து கொண்டிருந்தது. 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின், சகா ஆகியோர் இணைந்து 213 ரன்கள் குவித்தனர். அஸ்வின் 118 ரன்களும், சகா 104 ரன்களும் சேர்த்தனர். அஸ்வின் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
4-வது ஆட்டம் மழைக் காரணமாக கைவிடப்பட்டது. இந்தியா வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலும் இருவரின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. இதன் காரணமாக அஸ்வினுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றி குறித்து விராட் கோலி கூறுகையில், அஸ்வின் மற்றும் சகாவின் பெரிய பங்களிப்பின் காரணமாகவே இந்த தொடரை இந்தியா வென்றது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இருவரும் சிறப்பாக விளையாடியது எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. அவர்கள் இருவரும் களம் இறங்கிய இடம் (6-வது மற்றும் 7-வது இடம்) எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதில் சிறப்பாக செயல்பட்டதால் நாங்கள் இந்த தொடரை வென்றோம். நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
அவர்கள் இருவரும் அந்த இடத்தில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் நாங்கள் வலிமையான அணியாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஏனென்றால், டெஸ்ட் போட்டியில் டாப் விக்கெட்டுக்கள் சரியும்போது இந்த இடத்தில் அவர்கள் களம் இறங்குவது பலம் வாய்ந்தது.
கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவதால் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடர்ச்சியாக வெற்றி பெறுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
அவர்கள் இருவரும் அடித்த முக்கியமான ரன்கள் எதிர் அணியின் உத்வேகத்தை சீர்குலைக்க முக்கிய காரணமாக இருந்தது. இந்த தொடரில் கடின முயற்சி செய்து ஏதாவது செய்ய வெண்டும் என்று விரும்பினோம். அதனைச் சரியாக செய்ததன் மூலம் இந்த தொடர் நம் வசமாகியுள்ளது.
காலே டெஸ்டில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இல்லாமல் நாம் தோற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரின்போது பல நேரங்களில் 6-வது பேட்ஸ்மேன் இல்லாமல் திணறினோம். இதனால் 6 பேட்ஸ்மேன் உடன் விளையாடும் அணி எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க நாங்கள் விரும்பினோம். அதனால் கடைசி டெஸ்டில் ரோகித் சர்மாவை களம் இறக்கினோம்.
இந்தியாவில் நான்கு முன்னணி பந்து வீச்சாளர்களுடன் நாம் விளையாடினால், 5-வது பந்து வீச்சாளர் தேவையில்லை என்பதை உணர்வீர்கள். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் மூன்று ஸ்பின்னர்களுடன் விளையாடினால், அவர்கள் அந்த வேலையை சரியாக செய்ய வேண்டும். இரண்டு ஸ்பின்னர், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால், ரோகித் சர்மா மற்றும் முரளி விஜய் குறைந்தது 10 ஓவர்களாக வீச வேண்டும்’’ என்றார்.