மனைவியின் சடலத்தை 12 கி.மீ. தோளில் சுமந்து சென்ற கணவர்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2016 (வியாழக்கிழமை)
இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில், மனைவி உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து அவரது சடலத்தை சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்ல மருத்துவ ஊர்தி வழங்கப்படாததால், ஒரு ஏழை நபர், தனது மனைவியின் உடலை 12 கிலோ மீட்டர் தூரம், தோளில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டானா மாஜி எனப்படும் அந்நபரின் மனைவியான 42 வயது அமாங், ஒடிஸா மாநிலம், பாவானிபட்னா நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில், காசநோயின் காரணமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையிலிருந்து தனது கிராமம் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக குறிப்பிட்ட மாஜி, ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி செல்லுமளவு தனக்கு வசதியில்லை என்று தெரிவித்தார்.
அவரது குற்றச்சாட்டுக்களை மருத்துவமனை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரி பி. பிரம்மா இது குறித்து கூறுகையில், ''கடந்த செவ்வாய்க்கிழமையன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இப்பெண் அன்றிரவு உயிரிழந்தார். மருத்துவமனை பணியாளர்களிடம் எதுவும் தெரிவிக்காமல், தனது மனைவியின் உடலை இறந்த பெண்ணின் கணவர் எடுத்துச் சென்றார்'' என்று கூறினார்.
செவ்வாய்க்கிழமை இரவு தன் மனைவி இறந்து விட்டதாகவும், அவரது உடலை அகற்றுமாறு மருத்துவமனை அதிகாரிகள் அடிக்கடி கூறியதால், புதன்கிழமையன்று தன் மனைவியின் உடலை எடுத்துச் சென்றதாக மாஜி தெரிவித்தார்.
ஏழைகளுக்கு வேறு வழியில்லை:-
அவர் மேலும் கூறுகையில், ''மருத்துவமனை பணியாளர்களிடம் என் மனைவியின் உடலை எடுத்துச் செல்ல ஒரு வாகனம் வழங்குமாறு வாதாடி கேட்டுக் கொண்டேன். ஆனால், அதில் எந்த பயனுமில்லை. நான் ஓர் ஏழையாக இருப்பதால், தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்ய என்னால் இயலாது.
எனக்கு வேறு வழியில்லாததால், என் மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றேன்'' என்று மாஜி குறிப்பிட்டார்.
தனது கிராமமான மேல்கரில் மனைவிக்கு இறுதி சடங்குகள் செய்வதற்காக, புதன்கிழமை அதிகாலையில், மனைவியின் சடலத்தை ஒரு துணியால் சுற்றி தன் தோளில் சுமந்து கொண்டு தனது 12 வயது மகள் சவுலாவுடன் மாஜி நடந்து சென்றார்.
12 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற அவரை, வழியில் பலர் குறுக்கிட்டு விசாரித்தனர். பின்னர், அவசர மருத்துவ ஊர்தி அவரது உதவிக்கு வந்தது.
புதன்கிழமை மாலையில் மாஜியின் மனைவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
பாவானிபட்னா நகரம் அமைந்துள்ள காளஹண்டி மாவட்ட ஆட்சியரான டி. பிருந்தா, இத் தகவல் கிடைத்ததும் உடனடியாக அவசர மருத்துவ ஊர்திக்கு தான் ஏற்பாடு செய்து விட்டதாகக் கூறியுள்ளார்.
வறுமையில் வாடும் ஏழை மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தகனம் செய்ய உதவியாக உள்ள ஹரிஸ்சந்திரா யோஜனா என்ற அரசு திட்டம் மூலம், உள்ளூர் அரசு அதிகாரிகளை பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு 2000 ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், செஞ்சிலுவை அமைப்பின் மூலம் மாஜியின் குடுமபத்துக்கு 10,000 ரூபாய் கிடைக்கவுள்ளது'' என்று தெரிவித்தார்.