வாடிகனில் கோலாகலமாக நடந்த விழாவில், அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பேராயர்கள் மற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
புனிதர் பின்னணி:புனிதர் பட்டம் வழங்கும் அதிகாரம் வாடிகன் கத்தோலிக்க திருச் சபைக்கு உள்ளது. சம்பந்தப்பட்டவர் 'அருளாளர்' என அங்கீகரிக்கப்பட வேண்டும். புனிதர் பட்டம் பெறுவதற்கு 2 அற்புதங்களையும் நிகழ்த்தியிருக்க வேண்டும்.
*மேற்குவங்கத்தை சேர்ந்த மோனிசா என்ற பெண் வயிற்று புற்றுநோய் கட்டியால் அவதிப்பட்டார், பின் தெரசா உருவம் பதித்த சங்கிலியை அணிந்து பிரார்த்தனை செய்ததும் புற்றுநோயில் இருந்து மீண்டது தெரியவந்தது. இதை ஆய்வு செய்த வாடிகன் 2003ல் அன்னை தெரசாவை 'அருளாளர்' என அங்கீகரித்தது.
* பிரேசில் நாட்டில் ஒருவர் மூளை காய்ச்சல் காரணமாக 'கோமா' நிலைக்கு தள்ளப்பட்டார். அவரது குடும்பத்தினர் அன்னை தெரசாவை பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து அவர் குணமடைந்துள்ளார். இந்த 2-வது அற்புதத்தையும் போப் பிரான்சிஸ் அங்கீகரித்து, அன்னை தெரசாவுக்கு 'புனிதர்' பட்டம் வழங்க ஒப்புதல் அளித்தார்.
வாடிகன், புனித பீட்டர் சதுக்கத்தில் நடைப்பெற்ற விழாவில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப் ஆண்டவர் பிரான்சிஸ். லட்சக்கணக்கானோர் பங்கேற்ற இந்த விழாவில் இந்திய அரசு சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.
ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்ற மக்களின் நலனுக்காகவும், நோயால் நொடிந்தவர்களின் நல்வாழ்வுக்காகவும் இரவு, பகல் பாராமல் தொண்டாற்றிய அன்னை தெரசாவுக்கு நேற்று வாடிகன் அரண்மனையில் நடந்த விழாவில் போப் பிரான்சிஸ் ‘புனிதர்’ பட்டத்தை சூட்டி, அருளாசி அளித்தார்.
1910-ம் ஆண்டு அல்பேனியாவில் பிறந்த அன்னை தெரசா, இந்தியாவை தனது 2-வது தாயகமாக ஏற்றுக்கொண்டு, கொல்கத்தாவில் அறப்பணிகள் செய்தார். 1951-ம் ஆண்டு அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. தனது சமூக சேவைகளால் மக்கள் மனங்களில் அவர் இமயமாக உயர்ந்தார். அவருக்கு 1979-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்திய அரசு 1980-ம் ஆண்டு நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி சிறப்பு செய்தது.
அன்னை தெரசா, தனது 87-வது வயதில் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அரசு மரியாதையுடன் அவரது உடல் கொல்கத்தாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னை என்ற வார்த்தைக்கு இலக்கணமாக இன்றைக்கும் திகழ்ந்து வருபவர் அன்னை தெரசா. ஏழை எளியோருக்காக உழைப்பதையே தன் வாழ்வின் மிகப்பெரிய கடமையாகவும், லட்சியமாகவும் கருதியவர். அன்னை தெரசா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த மோனிகா பெஸ்ரா என்ற பெண்ணின் வயிற்று புற்றுநோயை 2002–ம் ஆண்டு குணப்படுத்தி அற்புதம் செய்தார். இதற்காக அவருக்கு 2003–ம் ஆண்டு, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு வழங்கினார்.
முக்திப்பேறுக்கு அடுத்த நிலை, புனிதர் பட்டம். புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் இரண்டாவது அற்புதம் நிகழ வேண்டும். இந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த ஒரு ஆண் மூளை கட்டிகளால் அவதியுற்றபோது, அவரது உறவினர்கள் அன்னை தெரசாவை பிரார்த்தித்தனர். அதில் அவர் அற்புதமாக குணம் அடைந்தார். இதை போப் ஆண்டவர் பிரான்சிஸ், அங்கீகரித்துள்ளார். இரண்டாவது அற்புதத்தையும் அன்னை தெரசா செய்துள்ள நிலையில், அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு போப் ஆண்டவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கினார். செப்டம்பர் மாதம் 4-ம் தேதி நடைபெறும் விழாவில் அன்னை தெரேசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவித்தார்.
அவர் புரிந்த அற்புதங்களை அங்கீகரிக்கும் விதமாக புனிதர் பட்டம் வழங்கும் விழா வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் ஆண்டவர் பிரான்சிஸ் அன்னை தெரசாவை புனிதர் பட்டம் பெற்றவராக அறிவித்து சிறப்பு செய்தார். வாடிகன் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பேராயர்கள் மற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 13 நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்தியாவின் சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்துகொண்டனர். அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி, வாடிகன் புனித அனஸ்தசியா தேவாலயத்தில் தொடர்ச்சியாக ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலிய ஆகிய மொழிகளில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன.
இந்த விழாவையொட்டி, அன்னை தெரசா தொண்டு இல்லத்தின் பராமரிப்பில் உள்ள ஆதரவற்ற சுமார் 1500 ஏழைகளுக்கு வாடிகன் அரண்மனை வளாகத்தில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. அன்னை தெரசா தொண்டு இல்லத்தை சேர்ந்த சுமார் 250 சகோதரிகள் அங்கு உணவு அருந்தியவர்களுக்கு பீட்சாக்களை பரிமாறினர்.