ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாதிமிர் புதினின் யுனைட்டெட் ரஷ்யா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகளின் பெரும் பகுதி நேற்று வெளியானது. 90 சதவீத வாக்குகள் எண்ணப் பட்ட நிலையில், புதினின் கட்சி 54.3 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன்மூலம் மொத்தமுள்ள 450 நாடாளு மன்ற உறுப்பினர் இடங்களில் குறைந்தது 338 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
புதினின் கட்சியைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி 13.54 சதவீத வாக்குகளுடன் 2-ம் இடத்தையும், அல்ட்ராநேஷனலிஸ்ட் லிபரல் டெமாக்ரடிக் கட்சி 13.28 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் இந்த வெற்றி கட்சியின் வெற்றி என தெரிவித்துள்ளார். கட்சியின் நிறுவனரும், அதிபருமான புதினுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
“அரசியல் முறையும், சமூகமும் தொடர்ந்து ஸ்திரமாக இருக்க விரும்பி மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். யுனைட்டெட் ரஷ்யா கட்சி தேசத்தின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பாடுபடும்” என அதிபர் புதின் தெரிவித்தார்.