தனது இசைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜானகி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2016 (வியாழக்கிழமை)
பிரபல பின்னணி பாடகி ஜானகி தனது 60 ஆண்டு கால இசைப் பயணத்தை முடித்துக் கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
எஸ்.ஜானகிக்கு இப்போது 78 வயதாகிறது. இறுதியாக ஒரு மலையாள தாலாட்டுப் பாடலுடன் ஓய்வுபெற்றுள்ளார்.
சினிமாவிலும் மேடைகளிலும் பாடியது போதும் என்ற திருப்தியை எட்டியிருப்பதால் இனிமேல் பாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
எஸ். ஜானகி 1957 ஆம் ஆண்டு வெளியான விதியின் விளையாட்டு தமிழ்த் திரைப் படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக அறிமுகமானார்.
அந்த வருடத்திலேயே அவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பாடி, அந்த மொழிகளிலும் அறிமுகமானார். அதன் பிறககு எஸ். ஜானகியின் மயக்கும் குரல் இந்த மும்மொழிகளிலும் தொடர்ந்து ஒலித்தபடி இருந்தது.
வயதான காலத்திலும் குழந்தைகளுக்காக அவர் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். குழந்தைகளின் குரலில் பேசுவதே சிரமம். ஜானகி அற்புதமாக பாடவும் செய்வார். இதேபோல் பல திறமைகள் கொண்டவர் ஜானகி.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஒரியா என பல மொழிகளில் இதுவரை 48000 பாடல்களுக்கு மேல் அவர் பாடியுள்ளார்.
அதேபோல் சிறந்த பாடகிக்கான தேசிய விருதை நான்குமுறை பெற்றுள்ளார். சிறந்த பாடகிக்கான மாநில விருதை 32 முறை பெற்று சாதனை படைத்துள்ளார். இதுதவிர வேறு பல விருதுகளும் ஜானகியின் சாதனையில் அடங்கும்.
திறமையும் புகழும் எந்தளவு இருந்ததோ அதேயளவுக்கு அடக்கமும், பண்பும் நிரம்பப் பெற்றவர். அவரை தனது 10 கல்பனைகள் படத்தில் பாட வைப்பதற்காக இயக்குனர் டான் மேக்சும் இசையமைப்பாளர் மிதுன் ஈஸ்வரனும் அணுகியிருக்கிறார்கள்.
அம்மா பூவினு என்று தொடங்கும் அந்தப் பாடல் பிடித்துவிடவே பாடுவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஓய்வு விருப்பத்தில் இருந்தவர் இதுவே என்னுடைய இறுதிப் பாடலாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
திரையில் மட்டுமின்றி மேடைகளிலும் இனி பாடப் போவதில்லை என்று திட்டவட்டமாக அவர் அறிவித்துள்ளார்.