மீட்பு படை வீரரை கண்கலங்க வைத்த குழந்தை: மனதை உருக்கும் சம்பவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/10/2016 (சனிக்கிழமை)
சிரியாவில் பிறந்து 30 நாட்களே ஆன குழந்தையை இடிபாடுகளுக்கிடையே மீட்பு படை வீரர் ஒருவர் காப்பாற்றிய போது கண்கலங்கிய சம்பவம் உலக மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சிரியாவில் கடந்த வியாழன் அன்று ரஷ்ய கூட்டுபடையினர் நடத்திய வான்வழி தாக்குதலால் பொதுமக்கள் பலரும் பாதிப்புக்குள்ளாயினர்.
இத்தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதி Jarjanaz நகருக்கு அருகே உள்ள Idlib கிராமம். இதுவரை Idlib பகுதியில் ரஷ்ய நடத்திய தாக்குதலின் விளைவாக 11 பேர் இறந்துள்ளதாகவும் அதில் 7 குழந்தைகள் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பகுதியில் இடிபாடுகளுக்கு இடையே உள்ளவர்களை மீட்பு படையினர் மீட்டு வந்த நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் குழந்தை ஒன்று சிக்கியுள்ளது.
இதைக் கண்ட மீட்பு படை வீரர்கள் உடனடியாக கட்டிடத்தை உபகரணங்கள் கொண்டு உடைத்தனர். அதன் பின் உள்ளே சென்று குழந்தையை பார்த்த போது குழந்தையின் முகத்தில் ரத்தம், தூசி படிந்த உடல், குழந்தையின் மெதுவான அழுகுரல். இதைக் கண்ட மீட்பு படை வீரர் (Abu Kifah) குழந்தையை கட்டி அணைத்துக் கொண்டு ஆம்புலன்சிற்கு வேகமாக கொண்டு சென்றார்.
அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக தயார் செய்து கொண்டிருந்த போது, Abu Kifah குழந்தையை பார்த்து உணர்ச்சியை அடக்க முடியாமல் அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
மருத்துவசிகிச்சை அளித்த போது குழந்தை பிறந்து 30 நாட்களே தான் ஆகியுள்ளது என்ற தகவலும் தெரியவந்துள்ளது.
அது மட்டுமில்லாமல் இக்காட்சியை நேரடி தொகுப்பு செய்த தனியார் ஊடகத்தைச் சேர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் Kate Silverton கண்கலங்கியது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அனைவரது மனதையும் உருக்கியுள்ளது.
இது குறித்து Kate Silverton தனது டுவிட்டர் பக்கத்தில், இக்காட்சியை காணும் போது கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை எனவும், தன்னால் உணர்ச்சியை கட்டுபடுத்த முடியவில்லை என்றும், தானும் ஒரு சராசரி மனிதன் தானே எனவும் கூறியுள்ளார்.
தற்போது அக்குழந்தை நன்றாக உள்ளதாகவும், மேலும் கட்டிட இடிபாடுகளிக்கு மத்தியில் சிக்கியிருந்ததால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சிரியா தாக்குதல்களில் 846 பேர் இறந்துள்ளதாகவும் அதில் 261 குழந்தைகள் அடங்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.