இந்தியா, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், சமண மத வழக்கப்படி, 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த, 13 வயது சிறுமி, மாரடைப்பால் மரணமடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில், எட்டாம் வகுப்பு படித்து வந்தவர், 13 வயது சிறுமி ஆராதனா. இவரது குடும்பத்தினர், செகந்திராபாத்தில் நகைத்தொழில் செய்து வருகின்றனர்.
ஆராதனா, சமண மத வழக்கப்படி, ஹைதராபாத் நகரில், 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் முடித்த போது மிகவும் சோர்வாக காணப்பட்ட அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இரண்டு நாட்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார்.
ஆராதனாவின் இறுதி ஊர்வலத்தில், சமண மதத்தைச் சேர்ந்த, 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆராதனாவின் இறுதி ஊர்வலம், 'ஷோபா யாத்திரை' என்ற பெயரில் விமரிசையாக நடந்தது. அவரை, 'தவ வலிமை பெற்ற பாலகி' என, ஊர்வலத்தில் பங்கேற்றோர் புகழ்ந்தனர்.
இருப்பினும், சமண மதத்தைச் சேர்ந்த பலர், சிறுமியை உண்ணாவிரதம் இருக்க அனுமதித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சமண மதத்தைச் சேர்ந்த, லதா ஜெயின் என்பவர் கூறுகையில்,
வயதான பெரியவர்கள், உணவு, நீரின்றி கடும் தவத்தில் ஈடுபடுவது வழக்கம். அவர்கள், சமண மத வழக்கப்படி உயர்ந்த நிலையில் வைத்து போற்றப்படுவர்.
ஆனால், ஆராதனா, 13 வயதே ஆன சிறுமி; அவரை, உண்ணாவிரதம் இருக்க அனுமதித்ததை ஏற்க முடியாது என்றார்.