பான் கி மூன் ஓய்வு பெறுகிறார் ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரஸ் நியமனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2016 (சனிக்கிழமை)
ஐ.நா. சபையின் புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டனியோ குட்டரஸ் நியமிக்கப்பட்டார்.
ஓய்வு
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன், டிசம்பர் 31–ந் தேதி ஓய்வு பெறுகிறார். அதையடுத்து, 9–வது பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அதிகாரபூர்வமற்ற தேர்தல்கள் நடைபெற்று வந்தன.
இதுவரை பதவி வகித்த பொதுச்செயலாளர்கள் அனைவரும் ஆண்கள் என்பதால், முதல்முறையாக ஒரு பெண்ணை தேர்வு செய்ய வேண்டும் என்று சில நாடுகள் கோரிக்கை விடுத்தபோதிலும், இந்த தேர்தல்களில் போர்ச்சுக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டனியோ குட்டரஸ்தான் முன்னிலை பெற்று வந்தார்.
கடந்த வாரம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவருக்கு ஆதரவு தெரிவித்து, அவரது பெயரை ஐ.நா. பொதுச்சபையின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது.
நியமனம்
இதையடுத்து, 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச்சபையின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ஐ.நா. சபையின் அடுத்த பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரஸ் முறைப்படி நியமிக்கப்பட்டார்.
அவர் ஜனவரி 1–ந் தேதி பொறுப்பு ஏற்றுக் கொள்வார். 5 ஆண்டுகளுக்கு அப்பதவியை வகிப்பார். உறுப்பு நாடுகள் விரும்பினால், மீண்டும் 5 ஆண்டுகளுக்கு அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கலாம்.
பதவிகள்
ஆன்டனியோ குட்டரசுக்கு வயது 67. அவர், 1995–ம் ஆண்டு முதல் 2002–ம் ஆண்டுவரை போர்ச்சுக்கல் நாட்டு பிரதமராக இருந்தார். 2005–ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2015–ம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை அகதிகளுக்கான ஐ.நா. தூதராக பதவி வகித்தார்.
இவரது தேர்வுக்கு பான் கி மூன் ஏற்கனவே வரவேற்பு தெரிவித்துள்ளார்