தமிழகத்தில் முதன் முதலாக முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்காத இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்ட மூன்று இடங்களிலும் அமோக வெற்றியை பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளில் போட்டியிட்டவர்களும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் அதிமுக 134, திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஓரிடத்தில் வெற்றி பெற்றன.இந்தத் தேர்தலின்போது, பணம் அதிகளவில் பரிமாறப்பட்டது என்ற குற்றச்சாட்டின் கீழ் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தேர்தலுக்குப் பின்னர் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சீனிவேலு மரணமடைந்தார். இந்நிலையில், இந்த மூன்று தொகுதிகளுக்கும் கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடந்தது.
இந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. முதன் முதலாக கட்சியின் பொது செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா பங்கேற்காமல் இந்த வெற்றியை அதிமுக பெற்றுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடந்த தேர்தல் என்பதால் அவர் பங்கேற்க இயலவில்லை. ஆனால், அனைத்தும் அவரது சம்மதத்திற்கு பின்னரே நடக்கிறது என்று அதிமுக கட்சி அறிவித்தது.
எந்த மாநிலமாக இருந்தாலும், இடைத்தேர்தலில் ஆட்சியில் இருக்கும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது சரித்திரம். ஆனாலும், இந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதற்குக் காரணமாக காவிரி விவகாரத்தை எடுத்துக் கொள்ளலாம்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னரும் தொடர்ந்து தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க கர்நாடகா மாநிலம் மறுத்து வருகிறது. இந்த விஷயத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாதான் முதலில் இருந்து காவிரி டெல்டா விவசாயிகளுக்காக நீதிமன்ற கதவுகளை தட்டி வந்தார்.
உச்சநீதிமன்றம் வரை சென்று இந்த வழக்கில் தமிழகத்திற்கு நியாயம் பெற்றுக் கொடுத்தார். காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஜெயலலிதா கொடுத்த அழுத்தம்தான் காரணம் என்று கூறலாம்.
சமீபத்தில் கூட காவிரியில் நடந்த கடுமையான எதிர்ப்புக்குப் பின்னரும் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் திமுகவுக்கு எதிராக வலிமையான வேட்பாளரை அதிமுக நிறுத்தி இருந்தது. அங்கு ஏ.கே. போஸ் வலுவான தளத்தை கொண்டிருப்பவர். அவர் வெற்றி பெறுவார் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டது. தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சியில் முன்பு நிறுத்தப்பட்ட வேட்பாளர்களே தற்போதும் நிறுத்தப்பட்டனர்.
இதற்கு பொதுவான எதிர்ப்பு எழுந்த போதும் அதிமுகவோ, திமுகவோ கண்டு கொள்ளவில்லை. அதே வேட்பாளர்கள்தான் போட்டியிட்டனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுகதான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட மூன்று இடங்களிலும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், முதலமைச்சர் ஜெயலிதாவும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வெற்றி அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்த வெற்றியும் சரித்திரத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது. கடந்த 1984ஆம் ஆண்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் எம்.ஜி.ஆர்., இருக்க, அப்போது நடத்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது.