கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக, சீன முதலீட்டாளருக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான சலுகை உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படும் என்று, சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலர் நிகால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் கொழும்பு வரவுள்ள சீன நிறுவன பிரதிநிதிகள் இந்த உடன்பாடு தொடர்பான இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும், பல மாதங்களாக நீடிக்கும் பேச்சுக்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து. உடன்பாட்டில் கையெழுத்திடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
சிறிலங்கா அரசாங்கமும், சீன முதலீட்டாளரும், கூட்டு முயற்சி ஒன்றை உருவாக்கி, கடலில் இருந்து மீட்கப்படும் நிலத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், அதனை எதிர்கால வணிகத்துக்குப் பயன்படுத்துவது தொடர்பாகவும் இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சிறிலங்கா அரசுக்கும், சீன முதலீட்டாளருக்கும் இடையில் ஏற்கனவே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்தின்படியே இந்த பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த யோசனைக்கு சீன முதலீட்டாளரும் இணங்கியுள்ளார். எனினும், சீன முதலீட்டாளருக்கு 99 ஆண்டு குத்தகை அடிப்படையிலேயே நிலம் வழங்கப்படுமே தவிர, நில உரிமை வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.