25 ஆண்டு கால சிறை வாசம் பற்றி நளினியின் சுயசரிதையில் பரபரப்பு தகவல்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2016 (வியாழக்கிழமை)
நளினியின் சுயசரிதையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், பிரியங்கா காந்தியை சந்திக்கும் சக்தி தனக்கு துளியளவும் இல்லை என்றும், பிரியங்காவை சந்தித்தவுடன் தான் தேம்பி தேம்பி அழுததாகவும் நளினி குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா அழுததை தன்னால் தாங்க முடியவில்லை எனவும், வெந்தணலில் விழுந்து துடிக்கும் புழுவாக துடித்தேன் என்றும், அந்த புத்தகத்தில் நளினி குறிப்பிட்டுள்ளார். உதடுகள் துடித்தபடி ஏன் அப்படி செய்தீர்கள் என பிரியங்கா தன்னிடம் கேட்டதாகவும், அப்பா மிக மென்மையானவர், நல்லவர் என கூறி பிரியங்கா கதறியதாகவும் புத்தகத்தில் நளினி தெரிவித்துள்ளார்.
பிரியங்காவின் அழுது சிவந்த கண்களையும் முகத்தையும் பார்த்து வேதனைப்பட்டதாகவும், அழாதீர்கள் மேடம் என்று கூறி பிரியங்கா அழுததை நிறுத்தும்படி வேண்டியதாகவும் நளினி தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.
குற்றவாளி என நம்பினால் இப்போதே உயிரை விடுகிறேன் என்றும், உங்கள் விருப்பம் போல் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள் என்றும், அவரிடம் கூறியதாக நளினி தெரிவித்துள்ளார். மேலும், ராஜிவ் படுகொலை காட்சியை தொலைக்காட்சியில் கண்டு தனது வீட்டில் அனைவரும் அழுததாகவும், தனது குடும்பத்தாருடன் 2 நாட்கள் சமையல் கூட செய்யாமல் அழுதபடி இருந்ததாகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.