இலங்கையின் பிரதான அரசியல்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் நாடெங்கிலும் 20க்கும் மேற்பட்ட மேதினப் பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தியுள்ளதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெற்கே, காலியில் மேதினக் கூட்டத்தை நடத்தியுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் மேதினப் பேரணியை நடத்தியது.இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் பொது எதிரணி என்ற கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து அரசாங்கத்துக்கு எதிரான தனியான மேதினக் கூட்டம் ஒன்றை கொழும்பில் நடத்தியிருந்தன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையின் எச்சரிக்கைகளையும் மீறி, அக்கட்சியின் உறுப்பினர்களான மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் பொது எதிரணியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
பொது எதிரணிக் கூட்டமைப்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் சார்பாகவே தான் அந்த மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ஷ இங்கு தெரிவித்தார்.
காலியில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் கட்சியை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
பலப்பரீட்சை ஏட்டிக்குப் போட்டியான இந்த இரண்டு மேதின பேரணிகளிலும் கணிசமான அளவு ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் நடத்திய மேதின பேரணியில், தமிழ் மக்கள் இன்னும் பல்வேறு துயரங்களை அனுபவித்துவருவதாக அதன் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.மலையகத்தில் பிரதான தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் தனித்தனியான பேரணிகளை நடத்தின.
வடக்கில், தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் மேதினப் பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தியிருந்தன.
இம்முறை மேதின பேரணிகளை ஆளும் சுதந்திரக் கட்சியின் பலப்பரீட்சைக் களமாக ஜனாதிபதி மைத்திரிபால அணியும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த அணியும் பயன்படுத்திக் கொண்டனர்
இலங்கையில் தொழிலாளர் உரிமைகளை மையப்படுத்துவதை விட, அரசியல் கட்சிகள் தங்களின் செல்வாக்குகளை பறைசாற்றுவதற்காகவே மேதினக் கூட்டங்களை பயன்படுத்தும் போக்கு அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளதாகவும் பாரதி மேலும் கூறினார்.