டிசம்பர் 5ஆம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா காலமானார். அவரின் உடல் இன்று பொது மக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது.
காலை முதல் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள், இந்திய குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராய் விஜயன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால், கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிகார் முதல்வர் அகிலேஷ் யாவத் உள்ளிட்ட பல இந்திய அரசியல் தலைவர்களும் ஜெயலலிதாவிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
பிறகு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்படிருந்த ராஜாஜி அரங்கத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இறுதியாக அவரின் உடலுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செய்தார், பின் அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், முன்னாள் ஆளுநர் ரோசய்யா ஆகியோர் ஜெயலலிதாவின் உடலிற்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் என்பவரும் இறுதிச் சடங்குகளைச் செய்யும் காட்சியை தொலைக்காட்சி நேரலைக் காட்சிகள் காட்டின.
புரட்சி தலைவி செல்வி.ஜெ.ஜெயலலிதா என்று பெயர் பொறிக்கப்பட்ட சந்தனப் பேழையில் அவரின் உடல் வைக்கப்பட்டு குழிக்குள் இறக்கி பின்பு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பல அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அவரின் உடல் கொண்டு செல்லப்பட்ட வழி நெடுகும் மக்கள் கூட்டம் கூட்டமாக காத்து நின்று ஜெயலலிதாவிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.