இன்று (திங்கள்கிழமை) மாலையில் சென்னைக்கு மிக அருகே கரையை கடந்த அதி தீவிர புயலான 'வர்தா', தற்போதுதமிழகத்தின் உள்மாவட்டங்களில் மையம் கொண்டுள்ளது.
இன்று காலை முதலே, சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
கடும் புயலின் எதிரொலியாக, பொது மக்கள் யாரும் மதியம் 1 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இந்த புயலின் மையப்பகுதி கரையை கடந்த போது, அதன் வேகம் 100 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மையம் கொண்டுள்ள 'வர்தா'
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயலான 'வர்தா', இன்று (திங்கள்கிழமை) மாலை 3 முதல் 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சென்னை துறைமுகத்தை கடந்ததாகவும், அது தற்போது தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மையம் கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயங்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
புயலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததாகவும், சென்னை மாநகரின் பல பகுதிகளிலும் பல மரங்கள் விழுந்ததாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார். வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதி தீவிர வர்தா புயலானது, வலு குறைந்து புயலாக மாறி உள்ளது. மேலும், அது வலு இழக்கும் என்று பாலச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதலே, சென்னை. காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல தொலைபேசி இணைப்புகள், மற்றும் கைபேசிகள் ஆகியவை செயலிழந்துள்ளன.
சென்னையில் பல முக்கிய சாலைகளிலும் வர்தா புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன.
பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை
வர்தா புயலின் தாக்கம் குறித்து தமிழக பேரிடர் மேலாண்மை முகமை கூறுகையில், மழை நின்று விட்டாலும், மரங்கள் பல பகுதிகளிலும் விழுந்துள்ளதால், பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
வேரோடு சாய்ந்த மரங்களை அப்புறப்படும் நடவடிக்கைகள் போர் கால் அடிப்படையில் நடந்து வருவதாகவும், பொது மக்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென தமிழக பேரிடர் மேலாண்மை முகமை மேலும் தெரிவித்துள்ளது.