பெர்லின் நகரத்தின் மையத்தில் மக்கள் நெரிசல் மிகுந்த சந்தை பகுதியில் 12 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான லாரியை ஓட்டிச் சென்றவர் என்று தாங்கள் கருதும் நபரிடம் ஜெர்மனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 48 பேர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலுக்கு காரணமான லாரியை ஓட்டியவர் ஆப்கான் அல்லது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த குடியேறி என்று பாதுகாப்பு தகவல்கள் தெரிவித்துள்ளதாக டிபிஏ செய்தி முகமை மேற்கோள் காட்டியுள்ளது.
முன்னதாக, இதுவொரு தாக்குதலா அல்லது விபத்தா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று பெர்லின் மாநில உள்துறை அமைச்சர் அன்ட்ராயஸ் காய்ஸெல் தெரிவித்திருக்கிறார்.
பயணி ஒருவர் இறந்து கிடந்ததை கண்டுபிடித்த வேளையில், அதற்கு அருகில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது,
நகரின் மேற்கே பிரதான வர்த்தகப் பகுதியான குர்ஃப்ரெஸ்தென்டம் அருகே பிரெட்ஸிபிளெட்ஸ் பகுதியில் இந்த சந்தை உள்ளது.
உள்துறை அமைச்சரோடும், பெர்லின் நகர மேயரோடும் ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்க்கல் தொடர்பில் இருந்து வருவதாக அவருடைய செய்தி தொடர்பாளர் ஸ்டெஃபென் ஸய்பர்ட் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
"இறந்தோருக்கு இரங்கல் தெரிவித்து துக்கம் அனுசரிக்கிறோம். காயமுற்ற பலரும் நிச்சயம் உதவி பெறுவார்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல்
பெர்லினுக்கும், ஜெர்மனிக்கும் இது மிக பயங்கரமான மாலைபொழுது" என்று ஜெர்மனி அதிபர் யோவாகிம் கௌக் கூறியிருக்கிறார்,
சம்பவ இடத்தை அவசர உதவி வாகனங்கள் நிறைத்துள்ளன.
பிரெட்ஸிபிளெட்ஸ் பகுதிக்கு அருகில் ஆபத்தான நிலைமைகள் எதுவும் தோன்றவில்லை என்று பெர்லின் காவல்துறை தெரிவித்திருக்கிறது,
அந்த பகுதியை தவிர்த்துவிட்டு வீட்டில் தங்கியிருக்குமாறு அவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தங்களுடைய உறவினர்கள் பற்றி தகவல் அறிவதற்கு +49 30 54023 111 என்ற உதவி தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சோதனை" என்கிற பக்கத்தை உருவாக்கி இருக்கும் சமூக ஊடகமான பேஸ்புக், பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை பிறருக்கும் அறிவிக்கும் வசதியை வழங்கியுள்ளது.
பிரான்ஸ், தன்னுடைய கிறிஸ்துமஸ் சந்தைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறது,
தீவிரவாத தாக்குதல்
ஜெர்மனி நேரப்படி இரவு 8:14 மணிக்கு இந்த கிறிஸ்துமஸ் சந்தை பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 50-80 மீட்டர் (54-57 கஜம்) தூரம் இந்த லாரி ஓட்டிச் செல்லப்பட்டதாக காவல்துறை நம்புவதாக டிபிஏ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்த சம்பவம் நடந்திருக்கும் நிகழ்வு தொடரை பார்த்தால் இது விபத்தாக அல்லது தாக்குதலாக இருக்கலாம் என்று காய்ஸெல் கூறியிருக்கிறார்.
தாக்குதல் நடத்திய லாரியை பார்த்தால் பக்கத்திலுள்ள போலந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் திங்கள்கிழமை காலையில் திருடப்பட்டிருக்கலாம் என்று போலந்து ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
லாரியில் பயணம் செய்தோரில் இறந்தவர் போலந்தை சேர்ந்தவர் என்றும், கைதாகி இருப்பவரின் குடியுரிமையை இன்னும் உறுதி செய்ய வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மாலை 4 மணிக்கு பிறகு இந்த லாரியின் உண்மையான ஓட்டுநரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இந்த லாரியை பயன்படுத்துகின்ற போலந்து நிறுவனத்தின் உரிமையாளர் ஏரியல் ஸூரௌஸ்கி கூறியிருக்கிறார்.
அந்த ஓட்டுநர் தன்னுடைய உறவினர் என்று தெரிவித்திருக்கும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர், அவரை குழந்தையாக இருந்த காலத்தில் இருந்தே தெரியும் என்றும், அவருக்காக சாட்சி சொல்ல தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்,
சந்தையில் புகுந்த லாரி மேசைகளையும், மர நாற்காலிகளையும் மோதி தள்ளி சென்றபோது, 3 மீட்டர் இடைவெளியில் உயிர் தப்பித்த பிரிட்டனின் பெர்மிங்ஹாமை சேர்ந்த சுற்றுலா பயணி மைக் ஃபாக்ஸ், "இது நிச்சயமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று அசோசியேட்டு பிரஸிடம் தெரிவித்திருக்கிறார்.
காயமுற்றோருக்கு அந்நேரத்தில் உதவியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.