தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் சோதனை
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2016 (புதன்கிழமை)
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சோதனை அதிகாலை 5.15 மணி முதல் மேற்கொள்ளப்பட்டது.
இன்று அதிகாலை முதல் இதேபோல் மற்ற இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. வெளி மாநில அதிகாரிகள் உள்பட சுமார் 600 பேர் மாநிலம் முழுவதும் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பலரையும் பின்னுக்கு தள்ளி தலைமைச் செயலாளர் பதவி பெற்றவர் ராம மோகன ராவ். சீனியாரிட்டி அடிப்படையில் 20வது இடத்தில் இருந்த இவர், இந்தப் பதவிக்கு வந்தது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மூத்த அதிகாரிகள் பலரையும் தாண்டி இவர் தலைமைச் செயலாளர் பதவிக்கு வந்தபோதே சர்ச்சைகள் உருவாகின.
தமிழ்நாட்டில் ஒரு தலைமைச் செயலாளர் வீடு சோதனைக்குள்ளாவது இதுவே முதல் முறையாகும். தலைமைச் செயலாளராக இருப்போர் வீட்டில் இதுவரை வருமான வரித்துறை சோதனை நடத்தியதில்லை.
1990களில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ராம மோகன ராவ். அப்போது மணல் எடுக்க அனுமதி தருவதன் மூலம் பணம் பெறலாம் என ஆட்சியாளர்களுக்கு ராம மோகன ராவ் ஆலோசனை வழங்கியுள்ளார். இரவது ஆலோசனையின் மூலமே மணல் குவாரிகள் அரசு வசமானது. தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூலம் கோடிகளை குவிக்கலாம் என்பதற்கு வித்திட்டவர் ராம மோகன ராவ்.
அண்மையில் சேகர் ரெட்டி என்பவரிடம் இருந்து வருமான வரித்துறையிர் கோடிக்கணக்கில் கணக்கில் வராத புதிய இரண்டாயிரம் ரூபாய் தாள்களும், கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற்றப்பட்டது. மேலும் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. சேகர் ரெட்டியிடம் கிடைத்த ஆவணங்கள் அடிப்டையில் ராம மோகன ராவ் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.