சென்னை முதல் குமரி வரை திரும்பிய இடமெல்லாம் போராட்டம் : ஸ்தம்பித்தது தமிழகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2017 (புதன்கிழமை)
ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என போராட்டக்காரர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் நாளுக்கு நாள் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை தாண்டி, இப்போது ஜல்லிக்கட்டு பிரச்னையை தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தங்கள் கையில் எடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் கடந்த ஒருவாரமாக இளைஞர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னையில் கடந்த 7ம் தேதி திடீரென்று மாணவர்கள், இளைஞர்கள் கூடி தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்தனர். சமூக வலைதளங்கள்: அந்த தீப்பொறி, மாநிலம் முழுவதும் பரவத் தொடங்கியது.
இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைக்க பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் பெரிதும் உதவியாக இருந்தது. தொடர்ந்து பொங்கல் பண்டிகையையொட்டி அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினர். அதில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதைக் கண்டித்து மாணவர்கள், இளைஞர்கள் அலங்காநல்லூரில் அமைதி போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். இந்தக் கைதைக் கண்டித்தும், அவர்களை விடுவிக்கக் கோரியும், அலங்காநல்லூரில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூரில் பற்றி எரிந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. நகரத்தில் வசிப்பவர்களும் தமிழ் உணர்வோடு தான் இருக்கிறோம், தமிழர்களுக்கு ஒன்று என்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்பதை நிரூபிக்கும் வகையில் தலைநகரமான சென்னையிலும் ஜல்லிக்கட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
மெரினாவில்: நேற்று முன்தினம் மெரினாவில் வெறும் 300 இளைஞர்களுடன் தொடங்கிய போராட்டம் தற்போது ஒரு லட்சம் பேர் வரை திரள செய்துள்ளது. அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வழக்குகளை வாபஸ்பெறக் கோரியும், ஜல்லிகட்டு உடனே நடத்த அனுமதி கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு போராட்டம் தீவிரம் அடைந்ததால் போலீசார் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தங்கள் செல்போனில் உள்ள டார்ச் லைட் மூலம் இளைஞர்கள் விடிய, விடிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.
பெண்களும் அதிகளவில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். நேரம், ஆக, ஆக இளைஞர்கள் சாரை, சாரையாக வந்து குவிந்தனர். இதையடுத்து போலீசார் பல கட்டங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீஸ் தரப்பில், முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும், அனைவரும் இங்கிருந்து இப்போது கலைந்து செல்லுங்கள் என்றும் கூறினர். ஆனால் போராட்டக்காரர்கள் தரப்பில் ‘முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுவரை இங்கிருந்து கலைந்துசெல்ல மாட்டோம்’’ என்று தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பேச்சு தோல்வி: நேற்று முன்தினம் நள்ளிரவு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின் நேற்று வேலை நாள் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். சமூகவலைதளங்கள் மூலம் விடுவிக்கப்பட்ட இந்த அழைப்பை ஏற்று நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆங்காங்கே ஊர்வலம், மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
இதனால் நேற்று போராட்டம் மேலும் தீவிரமானது. சென்னையில் மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி, லயோலா, புதுக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்ட இடத்திற்கு நடந்தே ஊர்வலமாக வந்து சேர்ந்தனர். இதனால் நேற்று காமராஜர் சாலை, மெரினா பகுதி முழுவதும் போர்க்களமானது. இதற்கிடையில் நடிகர்கள் ராதாரவி, லாரன்ஸ், மன்சூரலிகான், விவேக் ஆகியோர் மாணவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.
எங்கும் மனித தலைகள்: நேரம் ஆக, ஆக மெரினாவில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இளைஞர்களின் இந்த எழுச்சியால் மெரினாவில் கடல் இருப்பதே தெரியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக காட்சி அளித்தது. இருப்பினும் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் மாணவர்கள் சாலை ஓரம் நின்று போராட்டம் நடத்தினர். ஆனால் பிற்பகலில் கூட்டம் மிக அதிகமானால் வேறுவழியின்றி இளைஞர்கள் சாலைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மாலை 3 மணிக்கு மேல் காமராஜர் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.
அமைச்சர்கள் தரப்பில், ‘ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிடுவார். காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க அழுத்தம் கொடுக்கப்படும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும், நாடாளுமன்றத்திலும், குடியரசுத்தலைவரிடமும் எம்பிக்கள் மூலம் அவசரச் சட்டம் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும், பீட்டா அமைப்பை தடை செய்ய எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தனர்.
ஆனால் முதல்வர் அறிக்கை வெளியிட்ட பிறகு அதை படித்து விட்டுதான் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்று மாணவர்கள் அறிவித்தனர். ஆனால் நேற்று மாலை வரை முதல்வர் பன்னீர் செல்வம் இளைஞர்களின் போராட்டம் குறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மாலை 5.30 மணி அளவில் போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்ட முதல்வர், இதுதொடர்பாக டெல்லி சென்று பிரதமரிடம் அழுத்தம் கொடுப்பதாகவும், தற்போது இளைஞர்கள் போராட்டத்தை கைவிடுமாறும் தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிக்கையால் இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுவர் என போலீசார் எண்ணினர்.
நேற்று இரவும்: அதன்படி நேற்று மாலை 6 மணி அளவில் மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், போராட்டக்காரர்கள் மத்தியில் ஒலிபெருக்கி மூலம் பேசினார். அப்போது, முதல்வர் நாளை டெல்லி செல்ல இருப்பதால் உடனே போராட்டத்தை கைவிடுங்கள் என பொறுமையாக எடுத்துரைத்தார். ஆனால் இளைஞர்கள் அதை ஏற்காமல், முதல்வர் டெல்லி போனால் மட்டும் போதாது, ஜல்லிக்கட்டு அனுமதி தொடர்பான அறிவிப்பு வெளிவரும் வரை இங்கிருந்து கலைந்து போவதில்லை என உறுதியாக தெரிவித்துவிட்டனர்.
இதனால் தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் இளைஞர்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு நிலவரப்படி சுமார் ஒரு லட்சம் பேர் வரை போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் சென்னையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. நாளுக்கு நாள் இளைஞர்களின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. இளைஞர்களின் இந்த எழுச்சி போராட்டத்தை கண்டு தமிழக அரசு வியப்பில் ஆழந்துள்ளது. மாணவர்கள் எழுச்சியாக நடத்தும் இந்தப் போராட்டத்தில் எந்த வன்முறைச் சம்பவங்களும் நடைபெறவில்லை. அமைதியான வழியில் தங்களது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இது இந்தி எதிர்ப்பு போராட்டம் மற்றும் இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தன. சென்னையில் மட்டுமல்லாது காஞ்சிபுரம், கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, புதுவை ஆகிய நகரங்களிலும் கடந்த 2 நாட்களாக விடிய விடிய மாணவர்கள், போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் கல்லூரிகள் முன்பும், முக்கிய நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. பல இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. சில இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
ேபாலீஸ் தடியடி
மெரினாவில் கண்ணகிசிலை அருகே போலீசார் ஒலிபெருக்கி மூலம் பேசும்போது சில இளைஞர்கள் போலீசார் மீது தண்ணீர் பாக்கெட்டுகளை தூக்கியடித்தனர். இதனால் போலீசார் சிலர் மீது லேசான தடியடி நடத்தினர். அதில் ஒரு போலீஸ்காரரும், மாணவர் ஒருவரும் காயமடைந்தனர். அதன்பின் அந்தப் பகுதியில் அமைதி ஏற்பட்டது.
துணை கமிஷனர் மீது பாட்டில் வீச்சு
நேற்று மாலை 6 மணி அளவில் மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் போராட்டக்காரர்களிடம் ஒலிபெருக்கி மூலம் பேசி சமாதான முயற்சி நடத்தினார். ஆனால் இளைஞர்கள் அதை ஏற்கவில்லை. இதற்கிடையில் கூட்டத்தில் சிலர், துணை ஆணையரை நோக்கி தண்ணீர் பாட்டில்களை வீசியதால் பரபரப்பு நிலவியது. ஆனால் அதற்கு அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. உடனே அங்கிருந்து பொறுமையாக புறப்பட்டு விட்டார்.
30 பேர் கைது
மெரினாவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 30 பேரை போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறி போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.
கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள் நேற்று இயங்கவில்லை. இன்றும் மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் கல்லூரிகள் இன்று நடக்குமா, நடக்காதா என்ற குழப்பம் நிலவியது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குனர் மஞ்சுளா கூறுகையில், ‘’கல்லூரிகள் இயங்கும் பகுதிகளில் நிலவும் சூழ்நிலையை பொறுத்து அந்த கல்லூரி முதல்வர் விடுமுைற அளிப்பது குறித்து முடிவு எடுத்துக்கொள்ளலாம்’’’’ என தெரிவித்தார். இதனால் பெரும்பாலான அரசு, தனியார் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அதேசமயம் சட்டக்கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதாக சட்டக்கல்லூரி கல்வி இயக்குனர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை. வழக்கம்போல் இயங்கும்.
அலங்காநல்லூர் மக்கள் கெடு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தொடர் போராட்டம் நடத்தி வரும் கிராம மக்கள் சார்பில், நேற்று தீர்மானம் நிறைவேற்றி வாசிக்கப்பட்டது. அதில் இன்று (நேற்று) மாலைக்குள் மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும். இதற்கான முடிவை தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிமுக எம்பிக்கள் 50 பேர், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பு
* ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் நேற்று மாலை போராட்ட இடத்துக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.
* மெரினா கடற்கரையில் கூடியிருந்த மாணவர்களில் ஒருவர் கழுத்துவரை தனது உடலை மணலில் பல மணி நேரம் புதைத்து தனது எதிர்ப்பை காட்டினார்.
* நடிகர் சிவகார்த்திகேயன் பகல் 12 மணி அளவில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் மெரினா வந்தார். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு யாரும் அடையாளம் காண முடியாத வகையில் மீண்டும் ஹெல்மெட் அணிந்து பைக்கில் சென்றுவிட்டார்.
* ‘‘ஓபிஎஸ்சை காணவில்லை அவரை கண்டுபிடித்து கொடுப்போருக்கு ₹101 சன்மானம் வழங்கப்படும். இப்படிக்கு சின்னம்மா’’ என்று எழுதிய வாசகங்களை மாணவர்கள் ைகயில் வைத்திருந்தனர்.
* பொதுமக்கள், தன்னார்வ அமைப்பினர் பலர் டெம்போ மற்றும் ஆட்டோக்களில் பிஸ்கெட், வாட்டர் பாக்கெட், ஐஸ்கிரீம், உணவு உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு வழங்கியபடி இருந்தனர்.
* பீச்சில் நேற்று முன்தினம் அனைத்து உணவகங்கள், கடைகள் திறந்திருந்தன. நேற்று போராட்டம் வலுப்பெற்றதும் அனைத்தும் மூடப்பட்டன.
* மெரினாவில் நேற்றிரவும் கூட ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பு காணப்பட்டது.
* சென்னை மட்டுமின்றி, மதுரை, கோவை, திருச்சி என்று தூத்துக்குடி வரை சிறிய ஊர்களில் கூட விடிய விடிய மக்கள், மாணவர்கள், பெண்கள் என பல தரப்பினரும் போராட்டம் நடத்தியது பெரும் திருப்புமுனை.