ஏவுகணை சோதனை எதிரொலி: ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017 (வெள்ளிக்கிழமை)
இந்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்க அதிபர், டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மைக்கேல் பிளைனன் சில நாட்களுக்கு முன் கூறியதாவது: மேற்காசிய பகுதியில், ஈரான் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. சவுதி நாட்டு போர் கப்பல் மீது, ஈரான் அரசின் ஆதரவுடன், ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஈரான், ஏவுகணை சோதனை நடத்த, ஐ.நா., அமைப்பு ஏற்கனவே தடை விதித்துள்ளது; ஆனால், இந்த தடையை மீறி, சமீபத்தில், நவீன ரக ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
இது, அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்துவதுடன், ஐ.நா., விதிமுறையை மீறி செயலாகவும் கருதப்படுகிறது. எனவே, அந்த நாட்டிற்கு, அமெரிக்கா சார்பில், அதிகாரபூர்வமாக எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இந்நிலை தொடர்ந்தால், ஈரான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஈரான் அரசு எச்சரிக்கை நோட்டீசை பொருட்படுத்தவில்லை என கூறி ஏவுகணை சோதனைக்கு தொழில்நுட்பம், ஆயுத பொருட்களை விநியோகம் செய்த 24 க்கும் மேற்பட்ட ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.