யூதர்களின் கல்லறைகளை செப்பனிட்ட முஸ்லிம்கள்; அமெரிக்காவில் நெகிழ்ச்சி சம்பவம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2017 (புதன்கிழமை)
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் யூதர்களுக்குச் சொந்தமான மயானம் ஒன்று உள்ளது. கடந்த ஞாயிறன்று அதற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்கு ஸ்தாபிக்கப்பட்டிருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நினைவுத் தூபிகளை சாய்த்தும் தகர்த்தும் சென்றனர்.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட தாரிக்-எல்-மெஸ்ஸிதி என்ற இஸ்லாமிய செயற்பாட்டாளர் ஒருவர், உடனடியாக தனது முகநூல் கணக்கின் மூலம், முஸ்லிம்களுக்கு அழைப்பு ஒன்றை விடுத்தார். அதில், ‘நமது யூத சகோதர, சகோதரிகளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்தத் துயரத்தைத் துடைப்பதற்கு முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சேகரிக்கப்பட்ட நிதி மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் முயற்சியால் குறித்த மயானத்தைத் துப்புரவு செய்யப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட நினைவுத் தூபிகளும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டன.
முஸ்லிம்களின் இந்த மனிதாபிமானம் தம்மை நெகிழச் செய்துவிட்டதாக பிலடெல்பியா வாழ் யூதர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்காக 20 ஆயிரம் டொலர்களே தேவைப்பட்டபோதும், ஒட்டு மொத்தமாக ஒரு இலட்சத்து 38 ஆயிரம் டொலர்கள் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, கடந்த வாரம் சென்.லூயிஸ் நகரில் உள்ள யூதர்களின் மயானத்துக்குள் புகுந்த ஒரு கும்பல், இதுபோலவே சுமார் 170க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களைச் சாய்த்துவிட்டுச் சென்றிருந்தனர். அப்போதும், இதேபோன்று முஸ்லிம்கள் தாமாக முன்வந்து அந்த மயானத்தை புனர் நிர்மாணம் செய்து கொடுத்திருந்தனர்.