தமிழ் ஈழம் மலர எல்லா வகையிலும் தோள் கொடுப்போம் என்று நாம் சூளுரை ஏற்க வேண்டும்.விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவார். இலங்கை படையை முன் நிறுத்தி தமிழ் ஈழம் காண்பார்” என தெரிவித்தார். மேலும் தான் வெளியிட்ட ”குற்றம் சாட்டுகிறேன்” நூலில் இந்திய அரசை கடுமையாக விமர்சித்து கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டதாக கூறி ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில், வைகோ மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது. இதன் காரணமாக அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் இந்த தேசத்துரோக வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மேலும் தானாக முன் வந்து இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தின் 13வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன்னிலையில் வைகோ சரணடைந்தார். நீதிபதியிடம் பிணையில் செல்ல விருப்பமில்லை என வைகோ தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே வைகோவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வைகோ கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.
இதேபோன்று, கடந்த 2008-ம் ஆண்டில் நடந்த கருத்தரங்கு ஒன்றிலும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக, வைகோ மீது தேச விரோத வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை 3வது கூடுதல் நகர உரிமையியல் நீதிமன்றம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கில் இருந்து வைகோவை விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்களை கைது செய்யப் பயன்படுத்தப்படும் இந்த 124 ’A’ சட்டம், 1837-39ம் ஆண்டு இந்திய தண்டனை சட்டத்தை எழுதிய மெக்கல்லேவினால் வரையறுக்கப்பட்டு, பின் 1870ம் ஆண்டு முதல் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக போராடிய பலரும், தேசவிரோதிகள் எனக்கூறி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.