ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: அட்லெடிகோ மாட்ரிட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் வெளியூர் கோல் அடிப்படையில் பேயர்ன் முனிச்சை வெளியேற்றியது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2016 (புதன்கிழமை)
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி, வெளியூர் கோல் அடிப்படையில் பேயர்ன் முனிச்சை வெளியேற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து
கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் இடையிலான இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.
இதில் மாட்ரிட்டில் நடந்த அரைஇறுதியின் முதலாவது சுற்றில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தியிருந்தது.
இந்த நிலையில் முனிச்சில் நடந்த அரை இறுதியின் 2-வது சுற்று ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்)-பேயர்ன் முனிச் (ஜெர்மனி) கிளப் அணிகள் மீண்டும் மோதின. வெளியூர் ஆட்டத்தில் கோல் போடாத பேயர்ன் முனிச் அணி உள்ளூர் ஆட்டமான இதில் 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் களம் கண்டது.
தாமஸ் முல்லர் ஏமாற்றம்
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 31-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணி முதல் கோலை அடித்தது. ‘பிரிகிக்’ வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் ஷபி அலோன்சா இந்த கோலை அடித்தார். இதன் மூலம் முதல் பாதியில் பேயர்ன் முனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் அட்லெடிகோ மாட்ரிட் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் ஆன்டோனி கிரிஸ்மான் இந்த கோலை திணித்தார். 74-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணி 2-வது கோலை அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஊட்டியது. அந்த அணி வீரர் ராபர்ட் லிவான்டோஸ்கி தலையால் முட்டி பந்தை வலைக்குள் தள்ளினார்.
பரபரப்பான கட்டத்தில் பேயர்ன் முனிச் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் ‘பெனால்டி’ வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடிக்க எடுத்த முயற்சியை அட்லெடிகோ மாட்ரிட் அணியின் கோல் கீப்பர் ஜான் ஒப்லாக் அபாரமாக தடுத்து முறியடித்தார். இதேபோல் அட்லெடிகோ மாட்ரிட் வீரர் பெர்னாண்டோ டோரஸ் ஒரு பெலான்டி வாய்ப்பை வீணடித்தார்.
ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பேயர்ன் முனிச் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 3-வது கோலை அடிக்க கடைசி வரை கடுமையாக போராடியும் பலன் கிடைக்காமல் போனது. 73 சதவீதம் தனது கட்டுப்பாட்டில் பந்தை வைத்து இருந்த பேயர்ன் முனிச் அணி கோல் கம்பத்தை நோக்கி அதிகபட்சமாக 33 ஷாட்கள் உதைத்த போதிலும் அந்த அணியால் 2 கோல்களுக்கு மேல் அடிக்க முடியவில்லை.
வெற்றி பெற்றும் தகுதி இழந்த பேயர்ன் முனிச்
முடிவில் பேயர்ன் முனிச் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தியது. இருப்பினும் அந்த அணியால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் போனதால் போட்டியை காண வந்த ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். அரை இறுதி சுற்று 2 ஆட்டங்கள் முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல் அடித்து சமநிலை வகித்தன. இவ்வாறு சமநிலையை எட்டினால் சொந்த ஊரை காட்டிலும் வெளியூரில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பது கணக்கிடப்படும். அந்த வகையில் வெளியூரில் ஒரு கோல் அடித்ததின் அடிப்படையில் அட்லெடிகோ மாட்ரிட் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 2-வது முறையாக இறுதிசுற்றை அடைந்துள்ளது. பேயர்ன் முனிச் அணி தொடர்ந்து 3-வது முறையாக அரை இறுதியில் ஸ்பெயினை சேர்ந்த அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது.
இறுதிப்போட்டி
இத்தாலியின் மிலன் நகரில் வருகிற 28-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி, மான்செஸ்டர் சிட்டி-ரியல் மாட்ரிட் ஆகிய கிளப் அணிகள் இடையிலான அரை இறுதி 2-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை சந்திக்கும்.