அங்காரா: துருக்கியில் காவல்துறைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளானதில், அதில் பயணம் செய்த 12 பேரும் பலியானதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
துருக்கியின் துன்செலி மாகாணத்தின் புலுமுர் நகரத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், புறப்பட்ட 10 நிமிடங்களில் நிலைதடுமாறி விபத்தில் சிக்கியுள்ளது. இதனை அம்மாநில கவர்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
துருக்கியின் வடகிழக்கு பகுதியின் மலைகள் சூழ்ந்த பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக விபத்திற்குள்ளானதாக தகவல் வந்துள்ளது. இதில் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 1 நீதிபதி, 7 போலீசார், 1 ராணுவ வீரர், 3 விமானிகள் என 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் தெரிவித்த சுலைமான் சோய்லு, ஹெலிகாப்டரின் சிக்னல் இழப்பு ஏற்பட்ட இடத்தின் சுற்றுப்புற பகுதிகளில், ஹெலிகாப்டரை தேடி மீட்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவர்களின் தீவிர தேடுதல் வேட்டையில் பல மணிநேரங்களுக்கு பின்னர் ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. அங்கு வெளிச்சமின்மை மற்றும் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க அதிக நேரம் எடுத்தக் கொள்ளப்பட்டதாக சுலைமான் தெரிவித்தார்.