ஒரு நாள், 20 ஓவர் போட்டி அணிகளின் தரவரிசை: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிடம் இந்தியாவுக்கு சரிவு.
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2016 (வியாழக்கிழமை)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஆண்டுதோறும் நடப்பு சீசனுடன் முந்தைய ஆண்டில் அணிகளின் செயல்பாட்டினையும் கணக்கிட்டு புதிய தரவரிசையை வெளியிடுவது வழக்கம். நேற்று முன்தினம் டெஸ்ட் அணிகளின் தரவரிசை பட்டியல் வெளியானது. இந்த நிலையில் சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டி அணிகளின் புதிய தரவரிசையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
இதன்படி ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா (124 புள்ளி) முதலிடத்திலும், நியூசிலாந்து (113 புள்ளி) 2-வது இடத்திலும் தொடருகிறது. 4 புள்ளிகளை இழந்துள்ள இந்தியா (109 புள்ளி) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்திற்கு இறங்கியுள்ளது. தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும் (112 புள்ளி), இலங்கை 5-வது இடத்திலும் (104 புள்ளி), இங்கிலாந்து 6-வது இடத்திலும் (103 புள்ளி), வங்காளதேசம் 7-வது இடத்திலும் (98 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் 8-வது இடத்திலும் (88 புள்ளி), பாகிஸ்தான் 9-வது இடத்திலும் (87 புள்ளி), ஆப்கானிஸ்தான் 10-வது இடத்திலும் (51 புள்ளி) உள்ளன.
20 ஓவர் அணிகளின் தரவரிசையில் நியூசிலாந்து அணி 12 புள்ளிகள் கூடுதலாக பெற்று மொத்தம் 132 புள்ளிகளுடன் முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. இதுவரை ‘நம்பர் ஒன்’ ஆக இருந்த இந்தியா (132 புள்ளி) மயிரிழையில் பின்தங்கி 2-வது இடத்திற்கு இறங்கியுள்ளது. 3 முதல் 10-வது இடங்களில் முறையே உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் (122 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (119 புள்ளி), இங்கிலாந்து (114 புள்ளி), ஆஸ்திரேலியா (110 புள்ளி), பாகிஸ்தான் (104 புள்ளி), இலங்கை (98 புள்ளி), ஆப்கானிஸ்தான் (78 புள்ளி), வங்காளதேசம் (74 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன.