அமெரிக்காவின் போர் கப்பலான கார்ல் வின்சனை "ஒரே ஒரு அடியில் மூழ்கடித்துவிட முடியும்" என்ற எச்சரிக்கை நோடாங் ஷின்முன் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது
வின்சன் கப்பலை முதன்மையாக கொண்டு சண்டைக்கு தயாராக இருக்கும் அமெரிக்க ராணுவ படை, இந்த வாரத்தில் தீபகற்பத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வட கொரியாவின் அணு சோதனைகள் குறித்து அமெரிக்கா காத்து வந்த "மூலோபாய அமைதி" முடிவடைந்துவிட்டது என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு மத்தியில் அதிபர் டொனால்ட் டிரம்பால் அந்த போர்கப்பல் அனுப்பப்பட்டது.
வட கொரியாவின் தோல்வியடைந்த ஏவுகணை சோதனை மற்றும் சமீபத்திய ஆயுதங்களை வெளிக்காட்டிய, பிரமிக்க வைக்கும் ராணுவ அணி வகுப்பு ஆகியவற்றிற்கு பிறகு பதற்றங்கள் அதிகரித்தன.
ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் செய்தித்தாளான நோடாங் ஷின்முனில் ஞாயிறன்று வெளிவந்த இந்த செய்திக்கு பிறகு, கிம் ஜாங் உன், பன்றி பண்ணையை பார்வையிடுவது குறித்த விரிவான செய்தியும் வெளிவந்தது.
"எங்களின் புரட்சிப் படைகள் அமெரிக்க அணு சக்தி விமானம் தாங்கியை ஒரே அடியில் வீழ்த்த தயாராக உள்ளது என்றும், " பெரிய விலங்கு" என்று வட கொரியாவால் கருதப்படும் அதனை அழிப்பது தங்களின் ராணுவப் படையின் வலிமையை காட்டுவதற்கு ஒரு எடுத்துக் காட்டாக அமையும்" , என்று அப்பத்திரிகை கூறியது
இதே எச்சரிக்கையை மாநில செய்தித்தாளான `மிஞ்சு ஜோசன்` பத்திரிகையும் எதிரொலித்துள்ளது.
"எதிரிகள் திரும்ப எழ முடியாத அளவு ராணுவம் இரக்கமற்ற அடியை கொடுக்கும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.