மெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி
தொடர்பான காட்சிகள் நீக்கம்..!!
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2017 (வெள்ளிக்கிழமை)
பல்வேறு தடைகளை தாண்டி தீபாவளி அன்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிவரும் மெர்சல் திரைப்படத்தில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி குறித்து நடிகர் விஜய் பேசிய வசனத்தை வைத்து பா.ஜ.கவினர் மீண்டும் புதிய சர்ச்சையை உருவாக்கினர்.
28 சதவீத ஜி.எஸ்.டி வசூலிக்கும் இந்திய அரசாங்கத்தால் ஏன் மருத்துவத்தை இலவசமாக தரமுடியவில்லை என படத்தில் நடிகர் விஜய் பேசிய வசனம் ஆளும் பாஜகவினர் மத்தியில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா என பா.ஜ.கவினர் அனைவரும் நடிகர் விஜய்க்கும், மெர்சல் திரைப்படத்திற்கும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் சர்ச்சைக்குறிய அந்த காட்சிகளை நீக்கவேண்டும் என்றும் அந்த காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு மெர்சல் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விடுவதாக உறுதி அளித்ததாக தகவல் வெளியானது.
அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மெர்சல் திரைப்படத்தில், டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகள், முழுமையாக நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி இன்று மாலை முதல் சர்ச்சைக்குரிய காட்சிகள் அனைத்து திரையரங்குகளிலும் நீக்கப்பட்டது.