* சித்திரவதைகள் இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. * சிறைச்சாலைகளின் மோசமான நிலையை வர்ணிக்க வார்த்தைகளே வர மறுக்கின்றன. * நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்ப நிலைமாற்று நீதி மிக அவசியம்.
கைதுகள் மேற்கொள்ளப்படவேண்டிய தேவை இருக்குமிடத்தில் அரசு மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ஐ.நா. அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பிலுள்ள ஐ.நாவின் இலங்கைக்கான தலைமைப்பணிமனையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, வடக்கு, கிழக்கில் மீண்டும் இடம்பெற்றுவரும் கைதுகள் தொடர்பாக ‘சுடர் ஒளி’ வினவிய கேள்விக்கு பதிலளித்போதே சித்திரவதைகள் மற்றும் கொடூரமான மனிதத்தன்மையற்ற கீழ்த்தரமான செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஆணைகொண்ட ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜுவான் மென்டஸ் இவ்வாறு தெரிவித்தார்.
கேள்வி:- வடக்கு, கிழக்கில் கடந்த 37 நாட்களில் 30 இற்கும் மேற்பட்ட கைதுகள் இடம்பெற்றுள்ளன என்று தகவல்கள் கிடைத்துள்ளன. இதிலே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதிகள் சிலரும் அடங்குகின்றனர். கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் பலரும் இராணுவத்தின் புனர்வாழ்வுப் பயிற்சியை முன்னரே பெற்றவர்கள். நீங்கள் இங்கு வந்திருந்த காலத்திலேயே இப்படியான கைதுகள் இடம்பெற்றுள்ள நிலைமையை – அதுவும் கடத்தல் பாணியில் இடம்பெற்றிருப்பது குறித்து உங்களின் கருத்து யாது?