9 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9 ஆம் திகதி தொடங்கியது. இந்தப் போட்டி தொடங்கி 3 வாரங்கள் முடிந்துள்ள நிலையில் வீரர்களின் காயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இல்லாதளவுக்கு 11 வீரர்கள் காயத்தால் விலகியுள்ளனர். இதில் புதுமுக அணியான ரைசிங் புனே ஜயன்ட்ஸ் அணிக்குத் தான் அதிக அளவில் பாதிப்பு காணப்பட்டுள்ளது. அந்த அணியில் கெவின் பீற்றர்சன், டுபிளசிஸ், மிச்சேல் மார்ஷ், ஸ்ரீவ் சுமித் ஆகிய 4 வீரர்கள் விலகியுள்ளனர். பீற்றர்சன் 4 ஆவது ஆட்டத்தில் வலது காலின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தாலும், டு பிளசிஸ் 6 ஆவது ஆட்டத்தின் போது கைவிரல் முறிவாலும் விலகினார்கள்.
அவுஸ்திரேலிய கப்டனான ஸ்ரீவ் ஸ்மித் முழங்கையில் ஏற்பட்ட காயத்தாலும், மிச்சேல் மார்ஷ் தசைப் பிடிப்பாலும் விலகியிருந்தனர். இவர்களுக்குப் பதிலாக பெய்லி, குவாஜா ஆகிய வீரர்களை அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. பெங்களூர் அணியில் மிச்சேல் ஸ்டார்க், சாமுவேல் பத்ரி ஆகியோரும் மும்பை அணியில் மலிங்கா, லெண்டிஸ், சிம்மன்ஸ் ஆகியோரும் ஒரு போட்டியில் கூட ஆடாமல் காயத்தால் விலகியிருந்தனர்.
பஞ்சாப் அணியிலிருந்து ஷோன் மார்சும், கொல்கத்தா அணியிலிருந்து ஜோன் ஹாஸ்டிங்கும், டெல்லி அணியிலிருந்து ஜோயல் பேரிசும் காயத்தால் விலகியிருந்தனர். இந்த 11 பேரும் வெளிநாட்டு வீரர்களாவர். காயமடைந்த யுவராஜ் சிங் இதுவரை ஐதராபாத் அணிக்கு இன்னும் திரும்பவில்லை. காயத்திலிருந்து குணமடைந்த டுமினி (டெல்லி), வில்லியம்சன் (ஐதராபாத்) ஆகியோர் தங்களது அணியில் விளையாடி வருகிறார்கள்.