எல்லையில் டஜன் கணக்கிலான ஒலிபெருக்கிகளை தென் கொரியா வைத்துள்ளது. கொரியாவின் பாப் இசை பாடல்கள் முதல் வட கொரியா மீதான விமர்சன செய்திகள் வரை அதில் ஒலிபரப்பப்படும். எல்லையில் உள்ள மக்களோடு வட கொரிய ராணுவ வீரர்களும் இந்த ஒலிபரப்பை கேட்கின்றனர்.
வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதையடுத்து எல்லையில் ஒலிபெருக்கி மூலமான ஒலிபரப்பை நிறுத்துவதன் மூலம் இருதரப்பிலும் சுமூகமான நிலை ஏற்படும் என சோல் கூறியுள்ளது.
வட கொரியாவும் எல்லையில் சொந்தமாக ஒலிபெருக்கிகளை வைத்துள்ளது. தென் கொரியா மற்றும் அதன் கூட்டணிகள் மீதான விமர்சனங்கள் அதில் ஒலிபரப்பப்படும். வட கொரியாவும் தென்கொரியாவைப் போலவே ஒலிபரப்பை நிறுத்துமா என்பது பற்றி இதுவரை தகவல் இல்லை.
அதிக சத்தத்தில் எல்லையில் பிரசாரம் ஒலிபரப்பப்படுவது திங்கள் காலையன்று நிறுத்தப்பட்டுள்ளது என தென் கொரியா தெரிவித்துள்ளது . '' இரு கொரிய நாடுகளுக்கு இடையே ராணுவ பதற்றங்களை குறைத்து உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ஒரு அமைதியான சூழ்நிலையில் நடப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என செய்தி தொடர்பாளர் சோய் ஹோய் -ஹியுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
''இந்த முடிவு இரு நாடுகளும் தங்களுக்கு இடையே மேற்கொள்ளும் விமர்சனப் பிரசாரங்களை நிறுத்தவும், அமைதியை உருவாக்கவும் உதவும்'' என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வார இறுதியில் அணு ஆயுத சோதனைகளை நிறுத்துவதாகவும் அணு சோதனை தளத்தை மூடப்போவதாகவும் வடகொரியா தெரிவித்தது. வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதற்கு வட கொரியா தயாராகிவருவதையடுத்து இந்த ஆச்சரியமான அறிவிப்பு வெளிவந்தது.
'' கொரிய தீபகற்பத்தில் முழுமையாக அணு ஆயுத ஒழிப்பு செய்வதை நோக்கி எடுக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க முடிவு'' என தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் இதனை வருணித்துள்ளார்.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அடுத்த வெள்ளியன்று தென் கொரிய அதிபர் மூனை சமாதான கிராமமான பன்முன்ஜோமில் சந்திக்கவுள்ளார். ஒரு தசாப்தத்துக்கு பிறகு கொரிய நாடுகளுக்கு இடையே நடக்கும் முதல் மாநாடு இது.
வரும் ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை கிம் சந்திக்கவுள்ளார். வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான தற்போதைய அதிபர்களுக்கு இடையே நடக்கும் முதல் சந்திப்பாக இந்நிகழ்வு இருக்கும்.
கொரியப் போருக்கு பிறகு தென் கொரியாவின் பிரசார ஒலிபரப்பு தொடங்கப்பட்டு சில முறை நிறுத்தப்பட்டுள்ளது. வட கொரியா ராணுவ வீரர்கள் தங்களது தலைவர்கள் தங்களை தவறாக வழிநடத்துகிறார்களா என சந்தேகிக்க, ஒலிபெருக்கி வைக்கும் யோசனையை தென் கொரியா நடைமுறைக்கு கொண்டு வந்தது.