கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், மற்றும் லிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அந்த வகையில் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது காயமடைந்த 295 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீர்கொழும்பில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 68 பேருடைய சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கட்டான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதன்போது உயிரிழந்த மேலும் 25 பேரின் சடலங்கள் கட்டான தேவாலயத்தில் உள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந் நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசலையில் 27 பேருடைய சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக மட்டு.வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன், மேலும் 73 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த 6 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கி இதுவரை 370 வரையில் காயமடைந்துள்ளதுடன், இவர்களுள் 9 பேர் வெளிநாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த அசம்பாவிதங்கள் தொடர்பில் நாட்டு மக்களுகளை ஜனாதிபதி பொறுமை காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள், அமைதியுடனும் பொறுமையுடனும் செயற்படுமாறும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், செய்திகளை பொதுமக்கள் தவிர்க்குமாறும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு தங்களது அனுதாபங்களை கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக இந்தியா பிரதமர் தனது கண்டனத்தையும், அனுதாபங்களை வெளியிட்டுள்ளார். தீவிரவாதத்துக்கு எதிராக போராட முன் வரவேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இச்சம்பவங்களை இந்தியா வன்மையாகக் கண்டிப்பதாகவும், தொடர்ந்தும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்றும், இச்சம்பவத்துடன் திரைமறைவில் இருப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் வலைத்தளம் ஊடாகப் பதிவிட்டுள்ளார்.
மாலைதீவு ஜனதிபதி கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கை சம்பவங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்